31 C
Kuala Lumpur
Monday, August 24, 2026

Vetri

மலேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் காலமானார்; விளையாட்டு உலகம் சோகம்!

🔥 Views : 2,501
👁 Reading Now : 70

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும், முன்னாள் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளருமான சர்ஜித் சிங், தனது 63ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது திடீர் மறைவு மலேசிய விளையாட்டுத் துறையிலும் ஹாக்கி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் உள்ள Hospital Canselor Tuanku Muhriz UKM மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சர்ஜித் சிங், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுமார் 10 மணியளவில் காலமானார்.

மலேசிய ஹாக்கியின் முக்கிய வீரராக விளங்கிய அவர், 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் 1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அத்துடன், 1982 புதுடெல்லி மற்றும் 1990 பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா வெண்கலப் பதக்கம் வெல்வதற்கும் அவர் முக்கிய பங்காற்றினார்.

வீரராக மட்டுமின்றி பயிற்சியாளராகவும் மலேசிய ஹாக்கிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய சர்ஜித் சிங், 2007 முதல் 2008 வரை தேசிய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, 2024 மார்ச் முதல் 2026 மார்ச் வரை மீண்டும் தேசிய அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று தனது அனுபவத்தையும் திறமையையும் இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சர்ஜித் சிங்கின் மறைவுக்கு மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

இந்தத் துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மனவலிமையையும் ஆறுதலையும் பெற பிரார்த்திப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மலேசிய ஹாக்கியில் வீரராகவும் பயிற்சியாளராகவும் சர்ஜித் சிங் விட்டுச் சென்ற பங்களிப்பும் சாதனைகளும் என்றும் நினைவுகூரப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles