26.4 C
Kuala Lumpur
Wednesday, September 16, 2026

Vetri

Anak Krakatau எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடைய வாய்ப்பு; சாத்தியம் குறைவு – METMalaysia

🔥 Views : 2,736
👁 Reading Now : 37

இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடைவதற்கான வாய்ப்பு இருப்பினும், தற்போதைய நிலையில் அதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையான METMalaysia தெரிவித்துள்ளது.

METMalaysia தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் கூறுகையில், காற்றின் திசை, வேகம் மற்றும் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய எரிமலை வெடிப்புகள் ஆகியவை சாம்பல் பரவும் திசையையும் அதன் நகர்வையும் மாற்றக்கூடும் என்றார்.

தற்போது எரிமலைச் சாம்பல் இந்தோனேசியாவின் Sunda நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தரவுகள், வளிமண்டல நிலைமைகள் மற்றும் உலகளாவிய எரிமலைச் சாம்பல் ஆலோசனை மையங்களின் தகவல்களைப் பயன்படுத்தி நிலைமையை METMalaysia தொடர்ந்து கண்காணித்து வருவதாக முகமது ஹிஷாம் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துக்கே முக்கிய பாதிப்பு ஏற்படலாம்

Anak Krakatau எரிமலைச் சாம்பல் பரவல் காரணமாக இந்தோனேசியாவில் ஆறு விமான நிலையங்களின் விமானச் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஜகார்த்தாவை கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, சியோல்–இன்சியோன், தோஹா மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களுடன் இணைக்கும் சில விமானப் பாதைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் பட்சத்தில், விமானப் போக்குவரத்துக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளே முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று முகமது ஹிஷாம் குறிப்பிட்டார்.

மலேசிய வான்வெளி பாதிக்கப்படும் சாத்தியம் கண்டறியப்பட்டால், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM), அரச மலேசிய ஆகாயப்படை, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய இயக்குநர்களுக்கு METMalaysia தேவையான எச்சரிக்கைகள் அல்லது ஆலோசனைகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சரவாக் மற்றும் மலேசிய தீபகற்பத்தின் மேற்குப் பகுதிகளில் தற்போது பதிவாகியுள்ள குறைந்த பார்வைத் திறனுக்கு எல்லை தாண்டிய புகைமூட்டமே காரணம் என்றும், அது Anak Krakatau எரிமலைச் சாம்பலால் ஏற்பட்டதல்ல என்றும் METMalaysia தெளிவுபடுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles