
சரவாக்கின் மருடி, உலு பாராம் பகுதியில் உள்ள லாங் லெல்லாங் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் பயணித்த டாக்டர் ஐனுல் பரோவா கமரூடின் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
32 வயதான டாக்டர் ஐனுல் பரோவா, சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேரில் ஒருவராக அடையாளம் காணப்பட்டதாக அவரது மைத்துனர் நூரீஸ் முகமது பௌசி உறுதிப்படுத்தினார்.
அவரது தகவலின்படி, இன்று மாலை சுமார் 4 மணியளவில், டாக்டர் ஐனுல் பரோவாவின் கணவரான 37 வயது முஹம்மது ஃபைஸ் அப்துல் மாலிக்கை சுகாதார அமைச்சு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உயிரிழப்பு குறித்த தகவலைத் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவர் கிளந்தானில் உள்ள குடும்பத்தினருக்கு இந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்ததாக நூரீஸ் கூறினார்.
டாக்டர் ஐனுலின் குடும்பத்தினர் சரவாக்கிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். நாளை அதிகாலையில் சரவாக்கிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக கோலாலம்பூர் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்காக, குடும்பத்தினர் தற்போது சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



