32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

பங்குகள் மூலம் ₹37,000 கோடி லாபம் பார்த்த எல்.ஐ.சி… பாலிசிதாரர்களுக்கு லாபம் கிடைக்குமா?

🔥 Views : 25
👁 Reading Now : 43

எல்.ஐ.சி நிறுவனம் பல புதிய துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும், ஏற்கெனவே செய்துவந்த பல துறைகளில் முதலீடுகளைக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன், கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் அதிக லாபம் சம்பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.37,000 கோடியை, பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் லாபம் ஈட்டியுள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 44.4% அதிகமாகும். இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் பங்குச் சந்தையில் ரூ.94,000 கோடியினை முதலீடு செய்திருந்தது.

Share market (Representational Image)
Share market (Representational Image)

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா நோய் தொற்றுப் பரவல், நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு, தொழில் துறைகள் முடக்கம் என பல்வேறு காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவைச் சந்தித்திருந்தாலும், அந்த ஆண்டின் இறுதி மாதங்களில் பங்குச் சந்தை பலத்த ஏற்றத்தை சந்தித்தது. இதன் காரணமாக, எல்.ஐ.சி-யின் பங்கு முதலீடுகள் அதிக லாபத்தை கொடுத்திருக்கின்றன.

எல்.ஐ.சி குறிப்பாக, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருள்கள், ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் சுரங்கம், ஹார்டுவேர், பொழுதுபோக்கு மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்வது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு இந்தத் துறைகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாம் பாதியில் நல்ல வளர்ச்சியினைக் கண்டன. இதனால் எல்.ஐ.சி-யும் நல்ல லாபத்தினைப் பதிவு செய்திருக்கிறது.

மேலும், எல்.ஐ.சி நிறுவனம் பல புதிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாகவும், ஏற்கெனவே செய்துவந்த பல துறைகளில் முதலீடுகளை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மார்ச் 2020-ல் உள்கட்டமைப்பு துறையில் ரூ.24,000 கோடியாக இருந்த முதலீட்டை, தற்போது ரூ.4,100 கோடியாக குறைத்துள்ளது. ஐ.டி துறையில் ரூ.55,000 கோடியிலிருந்து, ரூ.11,600 கோடியாகக் குறைந்துள்ளது. எனினும் தற்போது மருந்து உற்பத்தித் துறையில் முதலீட்டினை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.17,700 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.37,000 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

LIC

இந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டில் முதலீடு செய்யும் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக திகழ்கிறது. அதோடு ரூ.34 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்தினையும் நிர்வகிக்கிறது.

எல்.ஐ.சி-யின் இந்த அறிவிப்பானது பாலிசிதாரர்களுக்கு மிக நல்ல விஷயமாகும். ஏனெனில் பாலிசிதாரர்கள் சிறந்த போனஸ் மற்றும் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அரசாங்கத்திற்கும் அதிகமான அளவில் டிவிடெண்ட் வருமானம் கிடைக்கும். இது, அரசாங்கம் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles