
நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மருத்துவமனையில்
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நோய்த்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
கட்டில்களின் பயன்பாடு 90 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மேலும் நோய்த் தொற்று குறைவதற்கான அறிகுறி தற்போது வரை காணப்படவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை சராசரி 6,539 ஆகப் பதிவாகியுள்ளது.
நோய்த் தொற்று எண்ணிக்கை தினசரி 4,000க்கும் கீழ் இருக்க வேண்டும் என்ற தேசிய மீட்சித் திட்டத்தின் இலக்கை விட இது அதிகமாகும் என்றார் அவர்.
அளவுக்கு அதிகமான நோய்த் தொற்று சம்பவங்களை நீண்ட காலத்திற்கு எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் காரணமாக மருத்துவத் துறையைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் சோர்ந்து விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.



