
கண்ணில் படுகின்ற அனைவரும் சிகை அலங்காரம் செய்துள்ளனர்
மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி அரசு பிறப்பிதுள்ள உத்தரவுக்கு இணங்க நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்கள் கடந்த ஒன்பது வாரங்களாக மூடிக் கிடக்கும் வேளையில் கண்ணில் தென்படுகின்ற அனைவரும் நல்ல சிகையலங்காரத்துடனும் புத்துணர்ச்சியுடனும் தென்படுவது ஏஎஸ்டி செய்தித் தளம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது?
அப்படி யென்றால் அரசின் உத்தரவு காற்றில் பறக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
அரசாங்க முடிவுக்கு மதிப்பளித்து கடையை அடைத்து வைத்துள்ளதுடன் மாதக் கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் முடிதிருத்தும் நிலைய உரிமையாளர்கள் ஏமாளிகளா என்ற நிலையையும் ஏஎஸ்டி செய்தித் தளம் அவதானிக்கிறது.
கோவிட்-19 நச்சுயிரியின் பெருந்தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு தேசிய அளவில் விதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கூறாக நாட்டில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் முடப்பட்டுள்ளன.
தற்பொழுது ஒன்பதாவது வாரமாக முடிதிருத்தும் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலைமையில் பொதுவெளியில் தென்படுகின்ற தலைவர்களும் அதிகாரிகளும் நன்றாக முடி அலங்காரம் செய்துள்ளதைக் காண முடிகிறது.

அண்மைய நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர்கூட சடைமுடியுடன் தென்படவில்லை. தொலைக்காட்சியில் அன்றாடம் தோன்றும் தலைவர்களும் அதிகாரிகளும் புதிதாக முடிவெட்டிக் கொண்டதைப் போல புத்துணர்வுடன் காணப்படுகின்றனர்.
முடிதிருத்தும் கடைகள் எல்லாம் பூட்டிக் கிடக்கும் வேளையில் இது எப்படி சாத்தியமாகிறது என்பது எங்களுக்கும் தெரியவில்லை. சிகை அலங்கார நிலையங்களை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட அரசாங்க உத்திரவிற்கு என்ன நேர்ந்துள்ளது என்பதும் புரியவில்லை என்று மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத் தலைவர் வெ.மகேந்திரன் ஏஎஸ்டி செய்தித் தளம் தொடர்பு கொண்டபோது இதன் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
ஏஎஸ்டி மேற்கொண்ட ஆய்வின்படி, தனிப்பட்ட முறையில் தலைவர்களும் பொதுமக்களும் முடி திருத்தம் செய்துகொள்வதாகவேத் தெரிகிறது. சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களே முடிதிருத்தி விடுவதும் நடைபெறுகிறது.
வேலை இல்லாமல் இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று முடிதிருத்தி விடுவது பரவலாக நடைபெறுகிறது. மேல்தட்டு மக்களும் உயர் அதிகாரிகளும் இப்படித்தான் இந்தச் சேவையைப் பெறுகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
எளிய மக்களைப் பொருத்தவரை, அந்தந்த வட்டாரத்தில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் இருப்பிடத்திற்கு கமுக்கமான முறையில் சென்று சிகை அலங்காரம் செய்து கொள்வதும் நடைபெறுதவதாகத் தெரிகிறது. இன்னும் சில இடங்களில் முடி திருத்தும் நிலையங்களின் பின்புறம் திறக்கப்பட்டு இரகசியமாக முடிதிருத்தும் சேவை தொடர்வதும் தெரிய வருகிறது. இதற்கு கடை உரிமையாளர்களின் ஆதரவும் மறைமுகமாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலைமை குறித்து ஏஎஸ்டி செய்தி தளம் மகேந்திரனிடம் மேலும் கருத்து கேட்டபொழுது, “எங்களைப் பொறுத்தவரை மத்தியக் கூட்டரசின் உத்தரவை மதித்து, கொரோனா பரவலைத் தடுப்பதில் எங்களுக்கும் உள்ள கடப்பாட்டை உணர்ந்து கடைகளை அடைத்துதான் வைத்திருக்கிறோம். மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினர்கூட அரச சட்டத்தை மீறுவதில்லை. அதேவேளை, எங்கள் உறுப்பினர்கள் மாதக் கணக்கில் வருமானம் இல்லாமல் முடி திருத்தும் நிலையங்களுக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு சார்பில் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் இதற்கு அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்” என்று மகேந்திரன் கேட்டுக் கொண்டார்.

சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்க நிருவாக அதிகாரியும் காவல் துறை முன்னாள் அதிகாரியுமான மு.மதியழகன், “சிகை அலங்கார நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினர். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தாலும் வட இந்தியர்கள், வங்காள தேசத்தவர், மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்களெல்லாம் முடிவெட்டும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது முடிதிருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் வேலை இல்லாமல் இருக்கும் இந்தத் தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ளலாம் என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஆனால், சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை நிலை’ என்று தெரிவித்தார்.



