
மலாயாவின் விடுதலைக்கு வித்திட்ட அரசியல் நிகழ்வு இந்திய விடுதலை. அந்த இந்தியா இன்று தனது 74ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மலேசிய அரசியலில் எழுந்துள்ள சதுரங்க வேட்டையால் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரும் நிருவாக தலைநகரமான புத்ராஜெயாவும் ஒரே நேரத்தில் அரசியல் வெம்மையால் தகிக்கின்றன
நாளை திங்கட்கிழமை பிரதமர் டான்ஸ்ரீ மஹியாடின் யாசின் மாட்சிமைக்குரிய மாமன்னரை சந்திக்க இருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிரணிக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணி சார்பில் 88 உறுப்பினர்களை உறுதியாகக் கொண்டுள்ள அன்வார், தயங்கி தயங்கி சற்று தள்ளி நிற்கும் வாரிசான், பெஜுவாங் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொண்டால் 105 எம்பி-க்களை அன்வார் தன் தலைமையில் அணிவகுக்கச் செய்ய முடியும்.
நாளை பதவி விலகுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் மஹியாடின், கடைசி நேரத்தில் தன் நிலையை மாற்றிக் கொள்ளவும் கூடும். தேசியக் கூட்டணியைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் பதவி ஒன்றே பிரதானம். அதனால் இவர்கள், பதவிக்காக எதைச் செய்யவும் எதைச் சொல்லவும் கூச்சமில்லாதவர்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி என்னும் தேன் கூட்டை சிதைத்ததுடன், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் உறவு கொண்டு கொல்லைப்புற ஆட்சியை அமைத்துக் கொண்டு ஒன்றரை ஆண்டுகளாக பெரும்பான்மையை நிரூபிக்காமல் உயிர்க்கொல்லி கிருமியான கொரோனாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளனர்.
இப்பொழுது மஹியாடின் சொல்கிறார், தான் பதவி விலகினால் தடுப்பூசி போடும் நடவடிக்கை பாதிக்கப்படும் என்று; இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆறாவது பிரதமர டத்தோஸ்ரீ நஜீப், “பொதுமக்களுக்கு ஊசி போடும் வேலையை சுகாதாரத் துறைதானே மேற்கொள்கின்றது; அந்த வேலையை என்னவோ தான் மேற்கொண்டிருப்பதைப் போல மஹியாடின் சொல்கிறாரே?” என்று நன்றாகக் கேட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட மஹியாடின், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை சந்தித்து அவர் படியும்படியான பேரத்தை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஓட்டுக்காக பிணப் பெட்டியை பரிசளிக்கவும் அறவாரிய நிதியை குடும்ப உறுப்பினர்களின் கடன் தவணையை செலுத்தவும் தயங்காத ஜாஹிட், தன் லாபத்திற்காக எதையும் செய்யத் தயங்காதவர்.
புத்ராஜெயா அலுவலகங்களை காலி செய்யும்படி மஹியாடின் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையிலும் தான் பிரதமராகத் தொடர்வதற்கு கடைசிவரை காய் நகர்த்துவார் என்பதில் ஐயம் இல்லை. இதன் விளைவாக, குதிரை பேரமும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விளையாட்டும் சீட்டாட்டம் போல இப்பொழுது கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டம்கூட இன்று காலையில் நடந்து முடிந்திருக்கிறது. அதில், அரசியல் தவலைகளான ஸுரைடா கமாருடின், எட்மண்ட் சந்தாரா, சேவியர் ஜெயக்குமார், கட்சி துரோகியரான முஸ்தஃபா முகமட் போன்றோரும் கலந்து கொண்டனர். சோகமான சூழ்நிலை சூழ நடந்துமுடிந்த இந்தக் கூட்டத்திற்குப் பின் அறிக்கை ஏது வெளியிடப்பட்டவிட்டாலும் அதில் கலந்து கொண்ட பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரிட்சுவான், பிரதமர் பதவியில் இருந்து நாளை விலக இருப்பதாக மஹியாடின் தெரிவித்தார்” என்று மட்டும் இரத்தின சுறுக்கமாக ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை மஹியாடின் பதவி விலகினால், அன்வார் ஆட்சி அமைக்க இன்னும் தேவைப்படும் 6 உறுப்பினர்களுக்கு என்ன செய்வார் என்பதுதான் எனபதுதான் இன்றைய கேள்வி.
மஹியாடினை நிராகரிப்பதாக உறுதிகாட்டும் 15 அம்னோ எம்பி-க்கள் அன்வாரை ஆதரிக்க முன்வருவார்களா என்பது ஐயம். குறிப்பாக, ஜெசெக ஆட்சிக் கட்டிலில் இணைந்து கொள்வதை அம்னோ சம்மதிக்காது என்றே தெரிகிறது. அதேவேளை, ஜசெக-வுடன் இணைந்து மக்கள் பணியாற்ற எங்களுக்கு தயக்கமில்லை என்று இதே அம்னோ இதற்குமுன் தெரிவித்திருந்த கருத்தும் கவனிக்கத்தக்கது.

மாற்று ஏற்பாடாக, துங்கு ரசாலியை முன்னிறுத்த அம்னோ விரும்பினால், அதற்கு பெர்சத்து கட்சி இணங்குமா என்பதும் ஐயம். ஒருவேளை, துணைப் பிரதமரான இஸ்மாயில் சஃப்ரி யாக்கோப் தான் பிரதமராக விரும்பினால், அவரை அம்னோவின் அனைத்து எம்பி-க்களும் ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குரியது.
எது எப்படி இருந்தாலும் நாளை பிரதமர் – மாமன்னர் சந்திப்பிற்குப் பின்னர் நிலைமை தெரியவரும். அதுவும், மாமன்னர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்தும் நாளைய அரசியல் களம் திசை திரும்பும்.
உடனே, நாடாளுமன்றத்தைக் கூட்ட உத்தரவிடுவாரா, அன்வாரை பிரதமராக நியமிப்பாரா அல்லது மஹியாடினை இடைக்கால பிரமதமராக நீடிக்கும்படி கேட்டுக் கொள்வாரா என்பதெல்லாம் நாளை திங்கட்கிழமை பகல் வேளையில் தெரியவரும்.
ஒன்றுமட்டும் உறுதி!
உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்தே ஆக வேண்டும். வினை விதைத்தவன் அதை அறுவடை செய்தே ஆக வேண்டும்.
அதனடிப்படையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை எப்படி நம்பிக்கைக் கூட்டணியினரே கவிழ்த்தார்களோ அதைப்போல தேசியக் கூட்டணி ஆட்சியையும் அதே தேசியக் கூட்டணியினரே கவிழ்க்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்.
ஆக, 2020 பிப்ரவரி 24 துரோக வரலாறு, நாளை 2021 ஆகஸ்ட் 16-இல் மீண்டும் புதிப்பிக்கப்படுகிறது.
இதே பிப்ரவரி 24-ஆம் நாளில்தான் ஹங்கேரி மன்னன் நேப்பில்ஸ் படுகொலை செய்யப்பட்டான்; ஆண்டுதான் வேறு; அது 1386.
எகிப்திய பிரதமர் அகமது மாஹிர் பாட்சாவும் கடந்த நுற்றாண்டில் ஒரு பிப்ரவரி 24-இல் படுகொலை செய்யப்பட்டார். அது 1945.
1809 பிப்ரவரி 24-இல் இலண்டன் மாநகரத்து ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானதைப் போல மலேசிய மக்கள் ஜனநாயக அரங்கும் 2020 பிப்ரவரி 24-இல் தீக்கிரையானது.
மலேசிய தேர்தல் ஜனநாயக அரசியலின் கறுப்பு அத்தியாயமான ‘தேசியக் கூட்டணி’ என்னும் சந்தர்ப்பவாத சுயநலக் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக ஆகஸ்ட் 16 அமையட்டும்.
