24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சமதரும சமுதாயத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மலேசிய மணிமகுடம் காத்திருக்கிறது!

நாளைய மலேசியா டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் பீடுநடை பயில தயாராக இருக்கிறது. அதற்கான வழியை வரும் 15-ஆவது பொதுத் தேர்தல் உருவாக்கித் தரும். எனவே, அண்மைக் காலமாக பிரதமர் பதவி அவருக்கு அருகில் வந்து வந்து நழுவிச் செல்வதைப் பற்றி மக்கள் வருத்தம் அடையத் தேவையில்லை. அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்; அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னேறுவோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

மலேசியத் திருநாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தை வகித்து வருபவர் சமதருமத் தலைவராக விளங்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். தேசிய அரசியலின் மையப் புள்ளியாக விளங்கும் மலாய் இனத்தில் எத்தனையோ தலைவர்கள் வந்துபோகின்றனர். அவர்கள் அத்தனை பேரும் சொந்த இனத்திற்கான அரசியலைத்தான் முன்னெடுக்கின்றனர்.

இத்தகையத் தலைவர்களின் நடுவே மலேசியாவின் பல இன கூட்டு சமுதாயத்திற்கும் பன்முகத் தன்மைக்கும் ஏற்ப பல்லின அரசியலை முன்னெடுத்து வருகின்றவர் அன்வார் இப்ராகிம் மட்டுமே.

இதற்காகவே முதலில் மறுமலர்ச்சி இயக்கத்தைக் கண்டு, அதனை அடுத்து மக்கள் நீதிக் கட்சி என்னும் பலஇனக் கட்சியை உருவாக்கி அதன்வழி ஜனநாயகக் கடைமையை ஆற்றி வருகிறார்.

பிரதமர் பதவி மட்டுமே தன்னுடைய இலக்கு என்று அவர் கருதினால், மற்ற மலாய்க் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து அவர் எளிதாக அதை அடைந்துவிட முடியும். ஆனால், அவர் அப்படிப்பட்ட தலைவர் இல்லை.

தனக்கென ஒரு ஜனநாயகப் பாதையை வகுத்து, அந்தக் கொள்கையின் அடிப்படையில் நீண்டகாலமாக அரசியல் பயணம் மேற்கொண்டுவரும் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

Click Play Button For Video News

இவரைப் போல வேறு எந்தத் தலைவ்ரும் தன்னுடைய அரசியல் பயணத்தில் கொடிய துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்ததில்லை. மலாய் அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் மலர்ப்படுக்கையால் ஆன அரசியல் பயணத்திற்குத்தான் தயாராக இருக்கின்றனர்.

இவர் ஒருவர் மட்டுமே மேடுபள்ளம் நிறைந்த முள்பாதையில் பயணித்து வருகிறார். அதனால்தான் சிறைவாசத்தை அனுபவிக்க நேர்ந்தது. அதைவிட, ஒரு ஜனநாயக நாட்டில் கன்னத்திலும் கண்ணிலும் குத்தப்பட்ட கொடுமைக்கும் ஆளானார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்பத்தைப் பிரிந்து தனிமைச் சிறையில் துன்பத்தை அனுபவித்த தியாக வரலாற்றுக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான அரிய வாய்ப்பு 2018-ஆம் ஆண்டில் அமைந்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் தேசிய அரசியல் மாற்றத்தை விரும்பியும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை நம்பியும் வாக்களித்தனர்.

12-ஆவது பொதுத் தேர்தல் சமயத்திலேயே தொடங்கிய மக்கள் மனமாற்றம், 14-ஆவது தேர்தலின்போதுதான் கனிந்தது. மக்கள் மனமுவந்து வழங்கிய அந்த பொன்னான வாய்ப்பை, கூட இருந்தே குழிபறித்து அடுத்து கெடுத்தவர் துன் மகாதீர்.

தற்பொழுது அண்மையில் நாட்டில் நடந்த அரசியல் மாற்றத்தின்போதுகூட அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு, பிகேஆர் கட்சியினரிடம் மட்டுமல்ல; நடுநிலையாளர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களிடமும் எழுந்தது.

ஆனால், கொல்லைப்புற வழிக்கு பழக்கப்பட்டவர்களும் பதவிமோகம் கொண்டவர்கர்களும் அரசியல் வஞ்சகர்களும் கூட்டுசேர்ந்து அன்வாருக்கான வாய்ப்பை தட்டிப் பறித்தனர்.

ஆனால், எதற்கும் களங்காத அன்வார், ஜனநாயக கடமையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். நாட்டில் பக்குவப்பட்ட தலைவராகவும் கனிந்த நிலையை எட்டியவராகவும் உருமாறி இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் துரோகத்தையும் வஞ்சகத்தையும் கண்டு துவளாதவர்.

அரசியலில் குறுக்கு வழியை நாடாதவர். பொதுவாக நேர்வழியில் நடப்பவர்களுக்கு கால மகளின் கருணை அகலுவதில்லை. ஒரு கட்டத்தில் அது வெற்றியை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவந்து சேர்க்கும்.

எது எவ்வாறாயினும், ஜனநாயகப் பாதையில் வழுமாமல் இயங்கிவரும் டத்தோஸ்ரீ அன்வார், ஒரு புதுமைத் தலைவர் என்பதையும் புரட்சி நாயகன் என்பதையும் நாளைய மலேசியா காணப்போவது உறுதி.

தற்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடன், டத்தோஸ்ரீ அன்வாரை மிஞ்சிய தோல்வி வரலாற்றுக்கு சொந்தக்காரர். 1988-ஆம் ஆண்டிலேயே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தகுதியிலேயே தோல்வி அடைந்தவர்.

அவர் இப்பொழுது அமெரிக்க ஒன்றியக் குடியரசின் அதிபராக விளங்குகிறார். அதைப்போல, நாட்டின் 10ஆவது பிரதமராக மலேசியாவின் மணிமகுடத்தை சூட இருப்பவர் மக்கள் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் என்பதில் ஐயமில்லை.

எனவே, அடுத்த பொதுத் தேர்தலின் மூலம் கால மகள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்க இருக்கும் பொன்னான வாய்ப்பிற்காக இன்றிலிருந்தே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒருமுகமாக களப்பணி காண்போம் என்று பிகேஆர் புக்கிட் ராஜா பொறுப்பாளருமான ஜி.குணராஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles