
நாடு தழுவிய நிலையில் மிகவும் பரவலாக பேசப்படும் முதியவர் ஏகாம்பரம் கிட்டு மரணம் தொடர்பில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று மலேசிய தமிழர் குரல் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஆகஸ்ட்டு 26 அன்று கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் அலிம் அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்த கெடா, குருணை சேர்ந்த முதியவர் ஏகாம்பரம் கிட்டு நேற்று உயிரிழந்தார். இறப்பதற்க்கு முன்பாக அவரின் இறுதி கட்ட போராட்டம் தொடர்பான காணொளி பார்ப்போர் கண்களை பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் கெடா மாநில தலைவர் .ப. தேவரத்தினம் , முதியவர் ஏகாம்பரம் மரணம் கோவிட் தொற்றினால் ஆனது என்றாலும், மருத்துவமனை பணியாளர்கள், டாக்டர் மற்றும் தாதியர்களின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.
கடுமையான மூச்சுதிணறல் காரணமாக அவர் மருத்துவப் பணியாளர்களின் உதவியை நாட முட்படும்போது பல தடவை கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நிலைமையை புகார் செய்தும் சுயமாகவே பரிசோதனை செய்துகொள்ளும்படி பணியாளர்கள் கூறியிருப்பது திமிர்த்தனமான போக்கை காட்டுகிறது என்றார் அவர்.
மாநில சுகாதாரத்துறை இயக்குனரின் அறிக்கை பெரும் முரணாக இருப்பதாகவும்,இது மாதிரியான சோக சம்பவங்கள் இனி எந்த ஒரு அரசு பொதுமருத்துவமனையிலும் நடக்காத வண்ணம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் மீதும் கடுமையான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஏகாம்பரம் மரணத்திற்கு நீதி வேண்டும், இதற்க்கு காவல்துறை மற்றும் மலேசிய சுகாதார துறையும் ஆவண செய்யும் என தாம் நம்புவதாக தேவரத்தினம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாகிவரும் ஏகாம்பரம் மரணம் தொடர்பான காணொளிக்கு இனம் பாகுபாட்டின்றி அனைத்து தரப்பினறும் கண்டனம் தெரிவிப்பது பாராட்டிற்குரியது.
குடும்ப தலைவரை இழந்துள்ளத அவர்தம் குடும்பத்திற்கு மலேசிய தமிழர் குரல் இயக்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
