

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ்க்குடும்பம் ஒன்று மூன்று மாதங்களாக சாலையோரத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளது.
அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தர்மம் தலைகாக்கும் அமைப்பின் தலைவர் மாற்றுத் திறனாளி மகேந்திரன் உதவினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு வேலை தேடி வந்த கணவன் மனைவியான ஶ்ரீ சுபாஷினி, யோகலிங்கம் ஆகியோர் வேலை இழந்து, ஆவணங்களையும் தொலைத்து இப்போது கடுமையான சூழலுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களுக்கு இரண்டு வயது பெண் குழந்தையும் இரண்டு மாதப் பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
ஶ்ரீ சுபாஷினியின் குடும்பத்தின் நிலை குறித்து தமது அமைப்பின் முகநூலில் நேரலையாகப் பேசிய மகேந்திரன், இயன்றவர்கள் நன்கொடை அளித்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, ஶ்ரீ சுபாஷினிக்குக் கடப்பிதழ், அவ்விரு குழந்தைகளுக்கும் பிறப்புப் பத்திரத்தையும் மகேந்திரன் பெற்றுத் தந்தார்.
ஶ்ரீ சுபாஷினியின் கணவர் யோகலிங்கத்தின் தொலைந்து போன கடப்பிதழ் ஜோகூர் பாருவில் கண்டெடுக்கப்பட்டு ரேவதி என்பவரால் மகேந்திரனுக்கு அனுப்பப்பட்டது.
அந்நால்வருக்கும் ஆவணப் பிரச்சனைகள் தீர்க்கப்படவே அடுத்ததாக விமானப் பயணச் சீட்டுகள் வாங்கப்பட்டன.
வரும் வெள்ளிக்கிழமை ஶ்ரீ சுபாஷினி, அவரது கணவர் யோகலிங்கம், அவர்களது மகள்களான யோக லட்சுமி, யாலனி தாலு ஆகிய நால்வரும் இரவு 10.45 மணிக்கு இலங்கைக்குப் புறப்படுவர் என மகேந்திரன் தெரிவித்தார்.
