
சரக்கு பட்டுவாடா நிறுவனங்கள் 51 விழுக்காடு பங்குகளை பூமிபுத்ராக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் புதிய நிபந்தனை பல சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஆரம்பத்தில் வருட இறுதிக்குள் இதைச் செய்யத்தவறினால் உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தது. இது எந்த விதத்தில் நியாயம் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் கேள்வி எழுப்பினார். இந்த சரக்கு பட்டுவாடா நிறுவனங்கள் பெரும்பாலும் சீனர்கள் ஆதிக்கத்திலிருந்தாலும் , 30 விழுக்காடு மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிலைப் பெரும்பாலானவர்கள் , அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாரம்பரிய குடும்ப தொழிலாகப் பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள். சட்டம் என்ற போர்வையில் அவர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் உழைப்பில் பாதியை மற்றவருக்குக் கொடு என்றால் , அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கும் மன உளைச்சல்கலுக்கும் ஆதங்கத்திற்கும் யார் பதில் சொல்வது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.


