
நாட்டில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் மித்ரா விவகாரம் தொடர்பில் பணத்தை எடுத்தவர்கள் உண்மையைச் சொல்லவேண்டும். இதை விடுத்து மழுப்பி கொண்டிருப்பது ஏன் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா கேள்வியை எழுப்பினார். ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அளவில் மித்ரா விடமிருந்து பணத்தை பெற்றுள்ளனர் என்று செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கட்சியை சேர்ந்தவர்களே என்னை தொடர்பு கொண்டு இது உண்மையா என்று வாய் பிளந்து கேட்கிறார்கள். கோவிட் தாக்கத்தினால் ஏழை இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஒரு அரசியல் கட்சி 91 லட்சம் வெள்ளி பெற்றுள்ளது. ஏழை இந்திய மாணவர்களுக்கு மணிக்கணினிகள் கூட இல்லாதபோது எப்படி இவர்கள் ஆன்லைன் கிளாஸ் நடத்தினார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. பல்வேறு பயிற்சித் திட்டங்கள் என்று சொல்லி மித்ராவிடம் இருந்து லட்சக்கணக்கான வெள்ளியை பெற்றவர்கள் நோய்த்தொற்று காலத்தில் எப்படி இந்தப் பயிற்சித் திட்டங்களை இவர்கள் நடத்தினார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் மித்ரா மூலம் சம்பளம் போடவில்லை என்று செய்தியும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் வேளையில் மித்ரா பணத்தை பெற்றவர்கள் உண்மையை பேச வேண்டும் என்றார் அவர்.



