
பந்திங் டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுவரை முன்வரவில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் ரோட்சியா தெரிவித்தார். அந்த மேம்பாட்டாளர்களை சிலாங்கூர் மாநில அரசு இதுவரை நேரில் சந்தித்ததில்லை. மாறாக, கூட்டங்களுக்கு இயக்குநர் வாரிய உறுப்பினர்களை மட்டுமே பிரதிநிதிகளாக அவர்கள் அனுப்புகிறார்கள். இது தவிர, வீடுகளுக்கு 15 விழுக்காட்டு விலை உயர்வை மட்டுமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் வீடு வாங்கியோரிடம் பேச்சு நடத்த சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். கோல்டன் ஹோப் பிளாண்டேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏரா பெர்மாய் நிறுவனம் ஏற்றது. எனினும், கடந்த 2006 முதல் அந்த வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக அந்த பத்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதில் ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம் போக எஞ்சிய இடம் வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.



