
எம்.முருகன்
ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தின் விமான பாலைய பூஜை நிகழ்வு அண்மையில் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மிக நிகழ்வில் லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரேணா துரைசிங்கம் மற்றும் அவரது துணைவியார் புவான் ஸ்ரீ கோமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாலை முதல் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை அருளைப் பெற்றனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக பூர்ணாவதி தீப நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத் திருப்பணிக்கான முக்கிய கட்டமாக கல் பதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. ஆலய வளர்ச்சிக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வரும் டான்ஸ்ரீ ரேணா துரைசிங்கம் மற்றும் புவான் ஸ்ரீ கோமதி ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வள்ளல் ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினரும், தங்கவேலு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மேலும், திரளான பக்தர்கள் பங்கேற்று பூஜை நிகழ்வை சிறப்பித்ததுடன், ஆலயத் திருப்பணிகள் வெற்றிகரமாக நிறைவேற இறைவனை வேண்டினர்.
ஆலய நிர்வாகம் தெரிவித்ததன்படி, அடுத்த ஆண்டு தை மாதத்தில் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பக்தர்களும் இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்டு இறையருளைப் பெறுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



