
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும்போது, மலேசியாவில் பெட்ரோல் விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில், எரிபொருள் விலையை அரசு மேலும் குறைக்க வேண்டும் என்றும், ஒரு லிட்டருக்கு 50 சென் வரை விலைக் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அன்வார் கூறுகையில், இத்தகைய பரிந்துரைகள் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட காலத்தில், சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 50 சென் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM2.40 முதல் RM2.50 வரை உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சவுதி அரேபியாவைப் போல மலேசியா முழுமையாக உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியைச் சார்ந்த நாடு அல்ல என்றும், நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 50 சதவீத பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பதாக அவர் விளக்கினார்.
இருப்பினும், ‘BUDI MADANI’ திட்டத்தின் மூலம் RON95 பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் அரசாங்கம் தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரச் சுமையை குறைப்பதற்காக இந்த மானியத் திட்டம் தொடரப்படுவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.



