
சமீபத்தில் தனது 101ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை, ஈமான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ முகமது இஸ்மாயில் தலைமையிலான கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, பிறந்தநாள் சிறப்பு பரிசாக புலுட் குனிங் (Pulut Kuning) வழங்கப்பட்டதுடன், அதனை துன் மகாதீர் வெட்டியும் நிகழ்வை சிறப்பித்தார். தொடர்ந்து, அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற ஈமான் கட்சியின் உள்கட்சித் தேர்தல் மற்றும் அதன் புதிய தலைமைக் கட்டமைப்பு குறித்தும் துன் மகாதீருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டத்தோ முகமது இஸ்மாயில், நாட்டின் அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து துன் மகாதீர் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறினார்.
“எங்களது அடுத்தகட்ட அரசியல் வியூகங்கள் குறித்தும் துன் மகாதீர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் பல பயனுள்ள அறிவுரைகளையும் வழங்கினார். அவரது ஆலோசனைகளை மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதுகிறோம். அவை எங்களது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு வழிகாட்டியாக அமையும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு, துன் மகாதீருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.



