
மித்ரா நிதியில் இருந்து கடன்களை அடைக்க 8 கோடியே 50 லட்சம் வெள்ளி பயன்படுத்தப்பட்டதாக ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா கூறியுள்ளார். இந்த 8 கோடியே 50 லட்சம் வெள்ளி எங்கே போனது என்று மலேசிய முன்னேற்ற கட்சியின் தகவல் பிரிவு தலைவர் மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் காத்திருந்தும் ஹலிமாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், முன்னாள் அமைச்சரும் செனட்டருமான பொன்.வேதமூர்த்தி நேற்று முன்தினம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இந்திய சமுதாயத்தின் சார்பில் புகார் அளித்தார் என்று தெரிவித்தார், ஊழல் தடுப்பு ஆணையம் பின்வரும் 3 விசயங்கள் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாதவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
1. மித்ராவிற்கென ஓர் இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு மித்ரா நடவடிக்கை யாவும் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த இணையப் பக்கத்தை ஹலிமா ஏன் முடக்கி நீக்கினார்?
2. இந்தியர் அரசியல் கட்சி தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஹலிமா நிதி ஒதுக்கினார் என்று கூறப்படுவது உண்மையா?
3. கடனைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தியாக ஹலிமாவால் சொல்லப்படும் 8 கோடியே 50 லட்சம் வெள்ளி எங்கே போனது?
மித்ராவில் பணியாற்றிய இந்திய அதிகாரிகளின் ஜூசா பி மற்றும் ஜூசா சி தகுதி நிலையை குறைத்து, சிவில் சேவையில் இந்திய அதிகாரிகள் கீழ்நிலைப் பதிவிகளுக்கு மட்டுமே உரியவர்கள் என்னும் நிலையை தோற்றுவித்து அதன்வழி இந்தியர்களை ஒடுக்கவும் அவமானப்படுத்தவும் ஹலிமா முயற்சி மேற்கொள்கிறாரா என்று மாதவன் மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹலிமா இன ரிதியாக செயல்படவில்லை என்றால் அவர் தன் நிலையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ‘ஒரே குடும்பம்’ என்னும் கொள்கை முழக்கத்துடன் பிரதமர் முன்னெடுக்கும் நிர்வாக நடைமுறைக்கு முரணாக ஹலிமா செயல் படுகிறார் என்று மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையாகக் சாடியுள்ளார்.
