
அம்னோவும் பெர்சத்து கட்சியும் மலாக்கா மாநிலத் தேர்தலில் எதிரும் புதிருமாக களம் காண்பது புத்ராஜெயாவைப் பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் கண்ணோட்டத்தை ஜசெக தலைவரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி மறுத்துள்ளார். சிங்கப்பூர் பன்னாட்டு விவகார அவதான நிறுவனத்தைச் சேர்ந்த ஓ ஈ சுன் என்னும் அரசியல் கண்ணோட்டகர் மலாக்கா மாநில தேர்தல் குறித்து இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்த அரசியல் கருத்தைத்தான் இராமசாமி மறுதலித்துள்ளார். அம்னோவும் பெர்சத்துவும் நாளுக்கு நாள் விலகிச் செல்கின்றன. மலாக்கா தேர்தலையும் கடந்து அடுத்தப் பொதுத் தேர்தலை நோக்கி இப்பொழுதே காய் நகர்த்தும் இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான விரிசலை ஒட்டவைக்க பாஸ் கட்சி தடவும் பசை பயனளிக்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இதை வழக்கமான ஒன்று என்று ஓ ஈ சுன் கடந்துபோக நினைப்பது சரியல்ல என்றும் இராமசாமி தன் முகநூல் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
