
‘1எம்டிபி’ ஊழல் வழக்கு தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்து கடந்த ஆண்டு ஜுலை 28 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டு, நம்பிக்கை மோசடி தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுகள், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 4 கோடியே 20 லட்சம் வெள்ளி பணத்தை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் தொடர்பில் நஜிப் துன் ரசாக் குற்றமிழைத்துள்ளார் என்று உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் துன் ரசாக் செய்த மேல் முறையீட்டு மனு மீது இன்று அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. நஜிப் துன் ரசாக் மேல் முறையீட்டு மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஏகமனதாக தள்ளுபடி செய்கிறது என்று நீதிபதிகள் குழுவுக்கு தலைமை ஏற்று நீதிபதி அப்துல் கரீம் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதன் வழி நஜிப்புக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதம் நிலை நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



