
மலாக்கா, ஜன.03: மலாக்காவில் வெள்ள நிலைமை மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரக்கூடிய மோர்ட்டன் கிராமம் என்னும் பாரம்பரிய பகுதி பாதி மூழ்கி விட்டது. நேற்றைய நள்ளிரவு தகவலின்படி இதுவரை 1,800 பேர் வெள்ள அபாயத்தில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளதாக மாநில வெள்ளப் பேரிடர் மீட்புப் பிரிவு அறிவித்துள்ளது. மலாக்கா ஆற்றோரம் அமைந்துள்ள இந்த மலாய்க் கிராமம், யுனெஸ்கோவின் பன்னாட்டு பாரம்பரிய நகரத்தை ஒட்டி உள்ளது. மண்ணின் மணம் பரவும் வகையில் வரலாற்றுத் தன்மையுடன் 1960-களில் கட்டப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள் நேற்று பெய்த தொடர் மழையின் விளைவாக மூழ்க ஆரம்பித்துள்ளன. வெள்ளம் தொடர்பாக எழுந்துள்ள அனைத்து சிக்கலையும் களைய மாநில அரசு திவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக முதல்வர் எட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார்.
