29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

பெர்லிஸ் முஃப்தி நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்: -மூன்று பிள்ளைகளின் பராமரிப்பு உரிமை தாய் லோ சியூ ஹொங்-இடமே உள்ளது

🔥 Views : 17
👁 Reading Now : 37

லோ சியூ ஹொங்-இன் 3 பிள்ளைகளும் தன் தாயிடம் செல்ல விரும்பினால் அதில் சிக்கல் ஒன்றும் இல்லை; ஆனால், பிள்ளைகள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று பெர்லிஸ் முஃப்தி முகமட் அஸ்ரி ஜைனுள் அபிடின் தெரிவிப்பது, தாய்க்கு நீதிமன்றம் வழங்கியுள்ள பராமரிப்பு உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார். 2021 மார்ச் 15இல் கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் சம்பந்தப்பட்ட மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கும் உரிமையை லோ சியூ ஹொங்-கிற்கு வழங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கும் உரிமையை தாய் கொண்டிருப்பதால், அதை மறுக்கும் நிலை, முஃப்திக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ கிடையாது. சட்டத்தை மிஞ்சியவர் ஒருவரும் இல்லை; நீதிமன்ற ஆணை, நிறைவேற்றப்படுவதுதான் சட்டத்தின் ஆட்சி ஆகும்.

அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்படுத்தும் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க மறுக்கும் பெர்லிஸ் முஃப்தியின் செயல், நீதிமன்ற அவமதிப்பாக வகைப்படுத்தக்கூடும். 2018 இந்திரா காந்தி வழக்கில், பிள்ளைகளை மதம் மாற்றும்பொழுது தாய் மற்றும் தந்தை இருவரின் சம்மதமும் தேவை என்று கூட்டரசு நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைப்போன்ற இன்னொரு மதமாற்ற வழக்கு அண்மையில், 2022 ஜனவரியில் நடைபெற்றபோதும் இது, மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-இல் முஸ்லிமாக மதம் மாறிய தந்தை, தன் ஐந்து பிள்ளைகளையும் இஸ்லாம் சமயத்திற்கு ஒருதலைபட்சமாக மாற்றியது தொடர்பான வழக்கில், முஸ்லிம் அல்லாத தாயின் ஒப்புதல் இன்றி பிள்ளைகள் மதம் மாற்றப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சட்டம் தெளிவாக இருக்கிறது; எனவே, பிள்ளைகள் மூவரும் தாய் லோ சியூ ஹொங்-இடம் திரும்ப வேண்டியது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கார்த்திகேசன் சண்முகம் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles