
அமெரிக்க தடகள ஓட்டத்தில் சாதனை புரிந்து மலேசியாவிற்கு பெருமை சேர்த்துளள்ள வீராங்கனை ஷெரினுக்கு மாட்சிமைக்குரிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் சுல்தான் அகமட் பில்லா ஷா-பேரரசியார் துங்கு ஹஜ்ஜா அசீசா அமீனா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு தடகள பந்தயக்காரர் குடும்பத்தில் பிறந்த ஷெரீன் வல்லபோய், கடந்த சனிக்கிழமை படைத்த சாதனை அபாரமானது; 2021-22 அமெரிக்க தேசிய கல்லூரி தடகள சங்கம்-NCAAஇன் பிரிவு II, பெண்களுக்கான 400 மீட்டர் தடகள ஓட்டப் போட்டியில் 300 அணிகளும் தனிப்பட்ட முறையில் 1,000க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் பங்கு பெற்றனர். இதில் கலந்து கொண்ட ஷெரின், முதல் இடத்தைப் பிடித்தார். 23 வயதான ஷெரின், 400 மீட்டர் தூரத்தை 54 வினாடிகளில் கடந்து, இத்தகைய சாதனையைப் படைத்த முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். முன்னதாக, Noraseela Mohd Khalid என்ற வீராங்கனை இதே 400 மீட்டர் தடகள ஓட்டத்தை 54.58 வினாடிகளில் ஓடி முடித்தது மலேசிய சாதனையாக இருந்தது. 2006-இல் Noraseela படைத்த சாதனையை இப்போது ஷெரின் முறியடித்துள்ளார்.
