
எம்ஜிஆர், காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடர்ந்து கொண்டே, தேவைப்படும் பொழுதெல்லாம் அந்தக் கட்சியை திட்டித் தீர்க்கவும் மடக்கவும் கா. காளிமுத்து என்னும் இலக்கியப் பேச்சாளரை எப்பொழுதும் கொம்பு சீவி வைத்திருப்பார்.
அதைப்போல, ஜசெக, பாஸ் கட்சிகளை மட்டுமல்ல; தேவைப்பட்டால் கூட்டணிக் கட்சிகளான மஇகா, மசீச போன்ற கட்சிகளைகூட வசைபாட அம்னோவில் 2010-ஆம் ஆண்டுகளில் வரிசை பிடித்து நின்ற ஜாஹிட் ஹமிடி, நோ ஓமார், ஹிஷாமுடின், நஸ்ரி அப்துல் அஸிஸ் ஆகியோரின் வரிசையில் அமைதியான தலைவராக அறியப்பட்ட தகவல்-பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ அனுவார் மூசாவும் இப்போது இணைந்துவிட்டதாகத் தெரிகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றி இவர் மூர்க்கமாக பேசி வருகிறார். கட்சித் தாவல் தடைச்சட்ட மசோதைவைப் பற்றி பேசினால், அரசாங்கத்தை மிரட்ட வேண்டாம் என்கிறார்; இப்பொழுது, சொஸ்மா சட்டம் தொடர்பில் அரசாங்கம் மண்டியிட்டு விட்டது; அதைப் பற்றி பேசாமல் தோல்வியை துடைத்துக் கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் காலியாகி விட்டது என்கிறார்.
அண்மை நாட்களாக இவர், வெளியிட்டுவரும் கருத்துகளைப் பார்த்தால் அம்னோவின் இந்தப் பருவத்து கொம்பு சீவிய காளை அனுவார் மூசாதான் போலும்.!
