
மலேசிய குடும்ப இணையதளம் மூலம் மலேசிய குடும்ப அணியில் உறுப்பினர்களாக பதிவு செய்ய அதிகமான தன்னார்வலர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்தார்.
இதன் மூலம் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக உதவிகளை வழங்க முடியும் என்றும் அவர் கூறுகின்றார்.
அதேவேளையில், சமூகவியல், பொருளாதார வளம், அரசியல் நடவடிக்கை ஆகியவற்றை நோக்கி மக்களை ஒருங்கிணைத்து, பின்னர் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாய சமூகத்தினரிடையே B40 குழுவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் மூலம் அவர்களின் வருமானத்தை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அக்டோபர் 2021 முதல், சமூக நலத் துறை மூலம் அரசாங்கம் 10 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய குடும்பக் குழுவை நிறுவியுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் விநியோக வழிமுறைகளையும், இதன் வழி ஒருங்கிணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக, கங்கார் பெர்லிஸ்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.
