
அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்கள், அரசாங்கம் முன்னெடுக்கும் பெருந்திட்டங்கள் ஆகியவற்றை உடனடியாக நிறுத்துவதன் மூலம், நிதியை மிச்சப்படுத்தி, மக்கள் எதிர்க்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும்படி நம்பிக்கை கூட்டணி, மத்தியக் கூட்டரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிக்கன நடவடிக்கையாக, அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன் அவர்களுக்கான ஊதியத்தையும் குறைக்கும்படி நம்பிக்கைக் கூட்டணியின் வாழ்க்கைச் செலவுக்கான குழு, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை வலியுறுத்தி உள்ளது.
கோழி இறைச்சி உள்ளிட்ட சில அத்யாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியத்தைத் திரும்பப் பெறுவதால், ஏற்கெனவே தாறுமாறான விலை உயர்வால் திணறிக் கொண்டிருக்கும் மக்கள், குறிப்பாக பி-40 தரப்பினரின் நிலை மேலும் மோசமடையும் என்பதை அரசு, தீவிரமாக கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



