
மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் த/பெ சண்முகம், பதவி மோகத்தால் தன்னிலை மறந்து பல தவறான முடிவுகளை எடுத்து சங்கத்தின் பெருமையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றார் என்று இந்து சங்க பொதுச் செயலாளர் மாணிக்கவாசகம் கதிரேசன் தெரிவித்துள்ளார்..
கடந்த 24.07.2022 அன்று நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில், தான் அடைந்த தோல்வியை ஆயிரக் கணக்கான சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு பதவி விலகிச் சென்ற மோகன் சன்முகம், மீண்டும் பதவி பேராசைக் கொண்டு தன்மூப்பாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் தில்லுமுள்ளான செய்து வருகிறார்..
தான் தலைவரே இல்லாத பட்சத்தில் 2-ஆவது மத்திய செயலவைக் கூட்டம் என, தன்னைச் சார்ந்தவ ஒருசிலரை அழைத்து நியாமற்ற பல முடிவுகளை எடுக்க துணிந்துள்ளார்.

நீண்ட காலம் மாநிலத் தலைவராகப் பணியாற்றிய நால்வரை, 21 நாள் அவகாசத்தில் பதவிநீக்கம் செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார். கோலாலம்-பூர் கூட்டரசுப் பிரதேசத் தலைவரும் புதிய பொதுச்செயலாளருமாகிய தன்னுடன், பகாங் மாநிலத் தலைவர் திரு.ஆதிமூலம், மலாக்கா மாநிலத் தலைவர் திரு.வேலாயுதம் ஜொகூர் மாநிலத் தலைவர் சங்க ரத்னா இராமகிருஷ்ணன் ஆகிய மூவரையும் சேர்த்து மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக்குவதாக மோகன் அறிவித்துள்ளார்.
பழிவாங்கும் படலத்தையும் அதிகார அத்துமீறலையும் தவிர வேறு ஒன்றையும் அறியாத மோகன், கடந்த 13 ஆண்டு காலத்தில் மலேசிய இந்து சமுதாயத்திற்கும் இந்து சங்கத்திற்கும் ஒன்றும் செய்ததில்லை; அவர் இப்பொழுதும், தன்னை அதேவிதமாக அடையாளம் காட்டியுள்ளார்.

தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர் யாராக இருந்தாலும் சங்க உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கியே பழக்கப்பட்ட இவர், அந்த ஆணவத்தின் அடிப்-படையில் இந்த முடிவையும் தன் சுயநலத்திற்காக எடுத்துள்ளார். டத்தோ மோகன் சண்முகம் தான் யார் என்பதை மலேசிய மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.
அவர் தலைமையில் அவரே ஏற்பாடு செய்த ஆண்டுக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்று கூறி அவர் தனக்கே களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆண்டுக் கூட்டத்திற்கு திரண்டு வந்த 1400-க்கும் மேற்பட்டோரில் ஏறக்குறைய 1000 உறுப்பினர்கள் ‘மாறுவோம்; மாற்றுவோம்’ அணிக்கு வாக்களித்து தங்க கணேசன் தலைமையிலான மாற்ற் அணியினரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ததை முதலில் ஏற்றுக் கொண்டு பின்னர் அதனை ஏற்க மறுத்து இப்போது சட்டத்திற்கும் இந்து தர்மத்திற்கும் புறம்பான நடவடிக்கைகளைய எடுத்து மலேசிய இந்து சங்கத்தை சீரழிக்க முற்பட்டுள்ளார் என்று க. மாணிக்கவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



