
-நக்கீரன்
கோலாலம்பூர்,ஆக.09:
அண்டை நாடான சிங்கப்பூர் இன்று தன் விடுதலை நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மலேசிய இந்துக்களின் பாரம்பரிய சமய அமைப்பான இந்து சங்கத்திற்கு பதவிவெறியர்களின் மூர்க்கத்தனத்தாலும் சுயநலப்போக்காலும் நீதிமன்றம் இன்று விலங்கிட்டிருக்கிறது.
அடுத்த மாதம் 28-ஆம் நாள் இந்து சங்க தேசியத் தலைவர் யார் என்பது குறித்த வழக்கு மறு விசாரணைக்கு வர இருப்பதால், அதுவரை, மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் என எவரும் சொல்லிக் கொள்ளக் கூடாது; மாறாக, சங்கத்தின் மத்தியப் பேரவையின் 27 உறுப்பினர்களும் நிறுவன சட்டப்படி இயக்குநர்கள் என்பதால், இவர்கள் அனைவரும் இந்து சங்க தலைமையகக் கட்டடத்திற்கு சென்று வரலாம் என்று இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மொத்தத்தில் அடுத்த 50 நாட்களுக்கு மலேசிய இந்து சங்க மத்தியப் பேரவையினர், தளபதி இல்லாத படையினரைப் போல சோர்ந்திருக்கப் போகின்றனர்.
இதற்கெல்லாம் யார் மூல காரணம் என்பது, இந்து சங்கத்தின் பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்களுக்கும் லட்சக் கணக்கான இந்து மக்களுக்கும் பளிச்சென தெரியும்.
ஆனாலும், இன்றைய நீதிமன்ற தீர்ப்பு, ‘நான்தான் தலைவர்’; ‘இன்னமும் நான்தான் தலைவர்’ என்று சொல்லிக் கொண்டு எந்த நபரும் பாய்-தலையணையுடன் மலேசிய இந்து சங்க தலைமைக் கட்டடத்தில் இனி தூங்க முடியாதபடி பட்டையைக் கிளப்புகிறது.
மொத்தத்தில் இந்து சங்க தலைமைத்துவ சிக்கல் எழுந்தது எப்படி? எதனால்??
மலேசிய இந்துக்களுக்கு ஆன்மிக சேவையையும் சமூகத் தொண்டையும் ஒருசேர வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மலேசிய இந்து சங்கத்தின் 45-ஆவது ஆண்டுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் நாள் நடைபெற்றது.
நிறுவன சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு அதன்படி இயங்கி வருகின்ற இந்து சங்கத்தின் தேசியத் தலைவரை அதன் உறுப்பினர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை டத்தோ அ. வைத்திலிங்கம் தலைமைத்துவ காலத்தில் மாற்றப்பட்டது.

27 உறுப்பினர் கொண்ட மத்திய செயலவை கட்டமைக்கப்பட்டு, அதில் இருந்துதான் தலைவர், தேசிய செயலாளர், தேசிய பொருளாளர் உள்ளிட்ட அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதேவேளை, இந்த 27 பேரில் மூன்றில் ஒரு பகுதியினரான ஒன்பது பேர் ஆண்டுதோறும் பதிவி விலகி, அந்த 9 பேருக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக ஆண்டுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பேரையும் உள்ளடக்கிய புதிய மத்திய செயலவைதான் ஆண்டுதோறும் புதியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது இந்து சங்கத்தின் சட்டபூர்வமான வழக்கமாக இருந்து வந்தது.
இந்த முறையில் கடந்த 13 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைத்துவத்தில், இந்து சங்கத்திற்காக அரசாங்கத்திடம் இருந்து வாங்கிய இலட்சக்கணக்கான வெள்ளியில் முறைகேடு நடந்திருப்பதாக குரல் எழுந்தது.
அதற்கு, எங்குதான் திருட்டு நடக்கவில்லை; அரசாங்க அதிகாரிகள் தப்பு செய்யவில்லையா? அமைச்சர்கள் ஊழல் செய்யவில்லையா என்று பத்திரிகையாளர்களிடமே எதிர்க்கேள்விக் கேட்ட அந்த மேனாள் தலைமை, பத்து பேர் கூடி இருக்கிற இடத்தில் இப்படி பண முறைகேடு நடப்பது சகஜம்தான் என்று 2021 ஆண்டுக் கூட்டத்தின்போது தெரிவித்தது; இது குறித்த செய்தி நாளேடுகளில் முதல் பக்க செய்தியாகவும் வெளிவந்தது. இந்த ஆண்டிலும் அதேச் சிக்கல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “நாங்கள் என்ன கொலையா செய்தோம்? என்று அதேத் தலைமை மீண்டும் கேள்வி கேட்டது.
இதன் மறுபொருள், நாங்கள் திருடினோம்; அதனால் என்ன? இது எங்கெங்கும் எவ்வெப்போதும் நடைபெறுவதுதானே(??) என்று எதிர்வினா எழுப்பி தங்களின் நாணயக் குறைபாட்டை நெஞ்சை நிமிர்த்தி ஒத்துக் கொள்வதைப் போன்றதுதான். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இந்து சங்க தலைமையக பொறுப்பாளர்களை வளைத்துச் சென்றதுகூட இந்தத் தலைமைக்கு உறைக்கவில்லை; அதனால்தான், இறைவன் அருளால் என்னைக் மட்டும் கைதுசெய்யாமல் விட்டுவிட்டனர் என்றது.
இத்தகைய முறைகேடான தலைமை மீது வெறுப்பும் சளிப்பும் கொண்ட இந்து சங்க உறுப்பினர்கள், அண்மைய 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தின்போது மரண அடி கொடுக்கும் விதமாக, ‘இந்து சங்கத்தின் தலைமையில் மாற்றம் வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து களம் இறங்கிய அணியில் போட்டியிட்ட அனைவரையும் 2/3 பங்கு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இந்த அதிரடி வெற்றியின் மூலம், புதிய தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழைய தலைமையும் புறமுதுகுகாட்டி ஓடியபோது, நான் மத்திய செயலவையில் இருந்தும் விலகுகிறேன் என்று அறிவித்தது; அந்தத் தலைமைக்கு வால் பிடித்த நாலு பேரும் கூடவே மத்திய செயலவையில் இருந்து விலகினர்.
13 ஆண்டுகளாக இந்து சங்க தலைமையகத்திலேயே உண்டு உறங்கி, மானிய முறைகேடு செய்து அதன் மூலம் மஞ்சள் குளித்த பழைய தலைமைக்கு, பதவி சுகம் இல்லாமல் தூக்கம் வரவில்லை போலும்!
உடனே, இரவோடு இரவாக சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டது.
இந்து சங்கத்தால் ஆலோசனைக்காக நியமிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞர் நிறுவனம், 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தை கண்காணித்த அதே நிறுவனம், திடீரென சட்டாம்பிள்ளை வேடம் பூண்டு, 2020 ஜூலை 20-இல் திருத்தப்பட்ட இந்து சங்க சட்டத்தின்படி, மாநிலத் தலைவர்களும் வாக்களித்துதான் தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற 11.1.4 என்னும் விதி பின்பற்றப் படாததால் 2022 ஜூலை 24 மத்திய செயலவைக் கூட்டம் செல்லாது; அதனால் பழைய தலைமைதான் இன்னமும் நீடிக்கிறது என்று ஓர் அறிக்கையை அனுப்ப, அதை ஆதாரமாகக் கொண்டு, நான் பதவி விலகுவதான் சொன்னதெல்லாம் செல்லாது; பதவி விலகுவதாக எழுத்துபூர்வமான அறிக்கை கொடுக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டு பதவி விலகிய தலைமை மீண்டும் கொல்லைப்புறமாகப் புகுந்து, தன்னுடன் சேர்ந்து பதவி விலகியவர்களை மீண்டும் அணி சேர்த்து 11 மத்திய செயலவை உறுப்பினர்களை மட்டும் கொண்டு கூட்டம் நடத்தி, தானே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், தனக்கு ஆமாம் சாமி போடாத 4 மாநிலத் தலைவர்களை நீக்குவதாகவும் இந்து சங்க தலைமையகத்திலேயே காலங்காலமாக உண்டு உறங்கி எழும் தலைமை, தலை கால் தெரியாமல் ஆட்டம் போட்டதால் இந்தச் சிக்கல் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நெருக்கடி எழுந்தது.
இதற்கிடையில், ஒருசில நியாயவான்கள் மட்டுமே, அரசியல்-ஆன்மிக எல்லைகளில் இருந்து குரல் எழுப்பி பழைய தலைமையை, தான் வாக்களித்தபடி பதவி விலகும்படி வலியுறுத்தினர்; மற்றத் தரப்புகள் வாய்மூடி மௌனம் காத்ததன் விளைவாக, மலேசிய இந்து சங்க தலைமையக சிக்கல் இன்று நீதிமன்ற கூண்டில் நிற்கிறது.
இதற்கிடையில், மலேசிய இந்து சங்க ஜோகூர் மாநிலக் கூட்டம், அதன் தலைவர் ‘சங்கரத்னா’, ‘ஸ்ரீகாசி’ ஆர். இராமகிருஷ்ணன் தலைமையில் கூடியபொழுது, மாநிலப் பேரவையில் இடம்பெற்றுள்ள 17 வட்டாரப் பேரவைகளும் மாநிலத் தலைவர் திரு. இராமகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில் இந்து சங்க முன்னாள் தலைவரின் படத்தையும் மாநில அலுவலகத்தில் இருந்து அகற்றி உள்ளனர்.
நாட்டின் தென்புலத்தில்தான் இப்படி நடந்துள்ளதென்றால், வடபுலத்து மாநிலமான பினாங்கு மாநிலப் பேரவையில் இடம்பெற்றுள்ள 11 வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்களும் 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மொத்தத்தில் தில்லுமுல்லுக் கூட்டத்தின் திருகுதாளம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் வண்ணம் நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு அமையும் என்றும் அதன்வழி மாற்றத்தை விரும்பிய இந்து சங்க உறுப்பினர்களின் எண்ணம் சற்று காலம் தாமதம் ஆனாலும் நீதி நிலையாட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்பதான் இன்றையத் தீர்ப்பில், மேநாள் தலைமையில் கூட்டியதாக சொல்லப்பட்ட இரு மத்திய செயலவைக் கூட்டங்களும் செல்லாது; அதைப்போல நான்கு மாநிலத் தலைவர்களை நீக்கியதாக முன்னாள் தலைமை கொக்கரித்ததும் செல்லாது என்று முடிவாகி உள்ளது.



