
மலேசியத் திருநாட்டில் ஆன்மிக நீர்ப் பாய்ச்சி பக்திப் பயிர் வளர்க்கும் பல்லாயிரக் கணக்கான ஆலயங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி, மலேசியவாழ் இந்துப் பெருமக்களிடையே தேசிய உணர்வை பிரதிபலிக்க ஆலயப் பொறுப்பாளர்கள் துணைபுரிய வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிற்றாலயம், பேராலயம் என்ற பேதமின்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ‘ஜாலூர் கெமிலாங்’ என்னும் தேசியக் கொடியை பறக்கவிட்டு பக்தப் பெருமக்களிடையே ஆன்மிக உணர்வுடன் தேசிய உணர்வும் மிளிரச் செய்ய வேண்டும். இதன் தொடர்பில், அனைத்து ஆலயங்களின் நிருவாகப் பெருமக்களும் உரிய ஏற்பாட்டை செய்து ஒத்துழைப்பு நல்கும்படி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்
இது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மாதம் என்பதுடன் தொடரும் செப்டம்பர் திங்களிலும் 16-ஆம் நாள் மலேசிய தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. அதனால், அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அரசு சார்பில் வழக்கம்போல கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதற்கிசைவாக, பெரும்பாலான வீடுகளிலும் வாகனங்களிலும் தேசியக் கொடி பறப்பதைக் காண முடிகிறது. அதைப்போல, அரச-தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
பொதுவாக, நம்முடைய வழிபாட்டு தலங்கள், பக்தி மையமாக மட்டும் அல்லாமல் சமுதாயக் கூடமாகவும் திகழ வேண்டும் என்னும் சிந்தனைக்கு ஏற்ப பெரும்பாலான ஆலயங்கள் புத்தாக்கம் பெற்று வருகின்றன.
சமூக நல உதவி, கல்வி வளர்ச்சிக்கு துணைநிற்றல், திருமுறைப் பயிற்சி என்றெல்லாம் நம்முடைய ஆலயங்கள் உருமாற்றம் அடைந்துள்ளன. இத்தகைய மாற்றம், நம் சமூக மேம்பாட்டிற்கும் சமய வளர்ச்சிக்கும் நிச்சயம் துணைபுரியும்.
இவ்வேளையில். மலேசிய இந்து சங்க தலைமையகத்தின் சார்பில் அனைத்து ஆலயங்களின் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக, மலேசிய இந்து சங்கத்தின் அண்மைய 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் ‘மாறுவோம்-மாற்றுவோம்’ அணிக்கு தலைமையேற்று இந்து சங்க உறுப்பினர்களால், அமோக ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயங்களின் நிருவாகத்தினர், தங்களுக்கு இருக்கும் பணிச் சுமைக்கு இடையில் இதையும் ஒரு கடமையாகக் கருதி ஆலய வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி, இந்துப் பெருமக்களிடையே நாட்டுப் பற்றையும் தேசிய உணர்வையும் பிரதிபலிக்க உதவும்படி கேட்டுக் கொள்வதுடன் இதன் தொடர்பில் இந்து சங்க மாநிலத் தலைவர்களும் வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்களும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஆலய நிருவாகத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் நலம் என்றும் தங்க கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.



