
இந்தியா, கேரளாவில் நூற்றுக்கணக்கான நீர்க்காகங்களின் வசிப்பிடமாக இருந்த மரமொன்று, நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக வெட்டிச் சாய்க்கப்பட்டதில், புதிதாக பொரித்த குஞ்சுகளும், ஏராளமான குருவி முட்டைகளும், கூடுகளும் அழிந்தன.
சுமார் 50 குருவி குஞ்சுகள், மரத்திலிருந்து விழுந்து உடனடியாக மடிந்தன என கேரள வனத்துறை தெரிவித்தது.
முன்னதாக அந்த மரம் வெட்டி சாய்க்கப்படும்போது, அதிலிருந்து குருவிகள் பறந்தோடுவதையும், குஞ்சுகள் சாலையில் விழுந்து இறந்து கிடப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்களும், காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன.
ஜூன் – நவம்பர் மாதங்களுக்கு இடையில் நிகழும் பறவைகளின் இனப்பெருக்க காலத்தின் போது இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது, மிகவும் வேதனையை அளித்திருப்பதாக, சமூக வலைத்தளவாசிகள் பலரும் கண்டித்திருந்தனர்.
இந்த சம்பவம் வைரலானதை அடுத்து, சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்கும் குத்தகையாளர் மீது, வனத் துறை சட்ட நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.
