
-நக்கீரன்
கோலாலம்பூர், செப்.04:
ஆசிய மண்டலத்தின் சாக்டரடீஸ் என்று ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பினால் பாராட்டப்பட்ட தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழா செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக கோலாலம்பூர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமா அரங்கத்தில் நடைபெற உள்ளது.
‘சுயமரியாதைச் சுடர்’ நாக.பஞ்சு தலைமை வகிக்கும் மாந்த நேய திராவிடர்க் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவரும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவருமான சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கொள்கைப் பேருரை ஆற்றவுள்ளார்.
ஐநா மன்றம், தந்தை பெரியாருக்கென்று தனித்த அடையாளத்தை வழங்காமல் பண்டைய கிரேக்க மண்ணில் வாழ்ந்த தத்துவ ஞானி சாக்ரட்டீஸின் பெயரால், ஏன் அழைத்தது என்பது சிந்தனைக்குரியது.

பண்டைய நாகரிகத்தின் தொட்டில் என்று கருதப்பட்டும் கிரேக்க நகரத்து இளைஞர்களிடம், ‘உன்னையே நீ அறிவாய்’ என்று மூன்று சொற்களைக் கொண்ட சின்னஞ்சிறு வாக்கியத்தை முன்வைத்து, அதன்வழி அவர்களின் உள்ளத்தில் சிந்தனை விதைகளைத் தூவிநார் சாக்ரட்டீஸ். இதனால், 2,450 ஆண்டுகளுக்கு முன் ஏதென்ஸ் நகரில் பொதுமக்களும் இளைஞர் பட்டாளமும் எந்த நேரத்திலும் அவருடன் சூழ்ந்திருந்ததைக் கண்டு பொறுக்கமாட்டாமல் அந்த மண்ணின் அந்நாளைய ஆட்சியாளர்கள் நஞ்சு கொடுத்து சாக்ரட்டீஸைக் கொன்றனர்.
சாக்ரட்டீஸ் எப்படி நீதி, நியாயம், ஆன்மா, கடவுள், சமூக ஏற்றத் தாழ்வு, பொருளாதார சமன்பாடின்மை, மன்னன், பாரம்பரியமாக தொடரும் வழக்கம் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து கேள்வி எழுப்பினாரோ அதைப்போல, தந்தை பெரியாரும் சாதி, மதம், மந்திரம், கடவுள், சொர்க்கம், நகரம், மனித குல ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தினார்.

சாதி பார்த்து நீதி உரைக்கும் சனாதன வேரை அடிப்படையாகக் கொண்ட பகவத கீதை குறித்து ஒருவரும் கேள்வி எழுப்பாதபோது, தந்தை பெரியார்தான் வள்ளுவர் வகுத்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சிந்தனையை முன்வைத்து மானிட சமத்துவத்தை முன்னெடுத்தார்.
மாந்த சமத்துவத்திற்கு இடையூறாக இருக்கும் சாதி ஒழிப்பிற்காக மாநாடு நடத்திய பெரியார், சாதியை ஓதுவது வேதம்தான் என்பதால் வேதத்தையும் எதிர்த்தார். நான்மறைதான் மதத்திற்கு ஆதாரமாக இருப்பதை அறிந்து அந்த மதத்தையும் எதிர்த்த பெரியார், பின்னர், மதம் கடவுளை வட்டமிட்டுள்ளது என்பதால் கடவுளையும் எதிர்க்கத் துணிந்தார். நிகழ்கால மனித சமுதாயத்தைப் பார்த்து, நான்கே நான்கு சொற்களைக் கொண்ட எளிய வாக்கியத்தை முன்வைத்தார்.
‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ என்பதுதான் அது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தீவிரவாத அணியினராராகவும் மிதவாத அணியினராகவும் பிளவுண்ட பொழுது ஒரு தலைமை இடைவெளி ஏற்பட்டது. அந்த நேரத்தில் பொருத்தமாக வந்து சேர்ந்தவர் காந்தி.
அதைப்போல, 1930-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நீதிக் கட்சியில் தலைமை இடைவெளியும் பலவீனமும் ஒருசேர நேர்ந்தபொழுது, அதை இட்டுக்கட்ட பெரியார் வந்து சேர்ந்தார். ஆனாலும், நீதிக் கட்சியில் இருந்தவர், தங்களின் மேட்டுக்குடி போக்காலும் கற்றவர்கள் என்ற எண்ணத்தாலும் செல்வந்தர் என்னும் பெருமிதத்தாலும் உயர்க்கல்வி கல்லாதவர் பெரியார் என்ற தப்புக் கணக்காலும் மெல்லமெல்ல விலகினர்.
இந்த நிலையில்தால் மிச்சசொச்சமாக தங்கியவர்களையும் அறிஞர் அண்ணா போன்ற இளைஞர் பட்டாளத்தையும் கொண்டு திராவிடர்க் கழகத்தைக் கட்டமைத்தார் பெரியார்.
1935-இல் இரண்டு-மூன்று இந்தியாக்களுக்காக பிரிட்டீஷ் மகாராணி இசைவுடன் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை, இந்தியா விடுதலை அடைந்தபின், புதிய இந்தியாவிற்காக அதே அரசியல் சட்டத்தின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க அண்ணல் அம்பேர்கர் தலைமையில் அரசியல் சாசனக் குழுவை நேரு உருவாக்கினார்.
கே.எம். முன்ஷி, சாதுல்லா, வி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என்.கோபாலசாமி ஐயங்கார் உள்ளிட்ட சட்ட மேதையர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் பார்த்துப் பார்த்து, நுணுகி நுணுகி, ஆராய்ந்து ஆராய்ந்து உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தை எடுத்த எடுப்பிலேயே திருத்தும்படி செய்தவர் தந்தை பெரியார். அந்த சட்டத் திருத்தத்திற்குப் பெயர் ‘கம்யூனல் ஜி.ஓ.’.
பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்கள் காசிக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். பெரியாரும் காசிக்கு சென்றார். இவர் புனித யாத்திரையாக அங்கு செல்லவில்லை.
தந்தை திட்டியதுடன் அல்லாமல் வீட்டைவிட்டும் வெளியேற சொன்னதால், வேறு வழியில்லாமல் கால்போன திசையிலுமாக மனம்போன போக்கிலுமாக காசி சென்ற பெரியார், காசியில் வாழ்ந்த காலத்தில்தான் முழு சுயமரியாதை உணர்வாளராகப் புடம்பெற்றார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியுடன் கைகோத்த அவர், இந்தியா விடுதலை பெறுவது முக்கியமல்ல; அது பிராமணர்களின் ஆதிக்கதிற்கு சென்றால், அந்த விடுதலையால் பயனில்லை என்று அஞ்சினார். அவர் அஞ்சியது, இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
85 ஆண்டுகளுக்கு முன் சோதனைக் குழாய் குழந்தையைப் பற்றி பேசிய பெரியார் எத்துணை தீர்க்கதரிசி என்பதை சுயமரியாதைப் பாதையில் பயணிப்பவர்கள் அறிவார்கள்.
மனித நேய மாண்பை மதித்த அவர், கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தை வகுத்த வள்ளுவனாரின் சிந்தனைக்கு ஏற்ப, தங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்ததுடன், மதுவிலக்குப் போராட்டத்தையும் பெரியார் தேசிய அளவில் முன்னெடுத்தார்.
ஒரு கட்டத்தில் அது மிகவும் தீவிரமடைந்தபொழுது, அதை நிறுத்திக் கொள்ளும்படி ஆங்கிலேய அரசு காந்தியாரிடம் கோரிக்கை வைத்தது. காந்தியோ, இது என் கையில்இல்லை; பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களின் கைகளில் உள்ளது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சொன்னதெல்லாம் வரலாறு.
இன்றைய தலைமுறையினர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வது நலம் பயக்கும். தந்தை பெரியார் முதல் முதலில் 1929-இல் வெளிநாடுகளுக்குப் பயணமானார். இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, எகிப்து, கிரீஸ், துருக்கி, பிரான்சு, ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபொழுது, அவர் முதலில் வருகை தந்த நாடு மலாயா.

அரை இலட்ச தமிழர்கள் அணி திரண்டு இந்த மலாயா என்னும் மலைநாட்டில் பெரியாரை வரவேற்றனர். கோலாலம்பூர், சுங்கை பட்டாணி, தைப்பிங், மலாக்கா ஆகிய பட்டணங்களில் தந்தை பெரியார் பேசி இருக்கிறார்.
இந்த வரலாற்றின் நீட்சியாக, தலைவர் நாக.பஞ்சு தலைமையில் மாந்த நேய திராவிடர்க கத்தினர் பேரளவில் ஏற்பாடு செய்துள்ள பெரியார் பிறந்த நாள் விழாவை மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ மு.சரவணன் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.
தமிழகத்தின் திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர்களான ஆ. சிங்கராயர், ‘பெரியார் பெருந்தொண்டர்’ சிற்பி அர.செல்ல்வராசு ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில், மலேசிய திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் மாந்த நேய திராவிடர்க் கழகத்தின் மதியுரைஞருமான ‘கொள்கைச் சுடர்’ இரெ.சு.முத்தையனார் தலைமையில் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கும் கொள்கையாளர் இருவருக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்த விழாவிற்குமுன் தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த தினமான 2022 செப்டம்பர் 17-ஆம் நாளில் மாந்தநேய திராவிடர்க் கழகத்தின் இளைஞர் அணித் தலைவர் த.நெ. நெடுஞ்சுடர் தலைமையில் இயங்கலைவழி சொற்போர் நடைபெற உள்ளது.
