
பக்காத்தானை எப்போதுமே விமர்சித்த வந்துள்ள ரமேஸ் ராவை இந்தியர்களின் நலனைக் கவனிக்க துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி தன்மூப்பாக நியமித்தது இந்திய சமூகத்திற்கு நல்லதை விட கெடுதலையே கொண்டுவரும் என பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி சாடியுள்ளார்.
இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் எண்ணற்ற பிரச்சினைகளில் இதுவரை எதையுமே கண்டு கொள்ளாது இருந்துள்ள ரமேஸ் ராவ், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அனுபவமே இல்லாத காரணத்தினால் அவரால் எதை சாதிக்க முடியும் என ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இதில் முழு அக்கறையும் அனுபவமும் பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடிய திறன்மிக்க, தைரியமான, நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைவரே பொருத்தமானவர் என ராமசாமி சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், இந்தியர்களின் பிரச்சினைகளைப் புரிந்து, பகுத்தாய்வு செய்து, தீர்வு காண பிரதமர் அன்வார் இப்ராஹிமே எல்லாத் தகுதிகளையும் கொண்டிருப்பதால், அந்தப் பொறுப்பை அவரே ஏற்றுக் கொள்வதே பொருத்தமாகும் என டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.



