
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜப்பானியர் காலத்தில் மியன்மாருக்கு ரயில் தண்டவாளம் நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபடுத்த ஒரு லட்சம் மலேசியர்களை தாய்லாந்துக்கு கொண்டு சென்ற பின்னர், அங்கு மரணமடைந்தோரில் 70 விழுக்காட்டினர் இந்தியர்கள் என மரண ரயில்வே முன்னெடுப்புக் குழுவின் தலைவர் பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.
அந்த ரயில்வே நிர்மாணிப்புத் திட்டத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தாய்லாந்து, மியன்மார், இந்தோனேசியர்கள், சீனர்கள், மலேசியர்கள், மலேசியத் தமிழர்களாக 2 லட்சம் பேர் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வலுக்கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மரண ரயில்வே நிர்மாணிப்பில் மரணமடைந்தோரை இதுவரை மலேசியா கெளரவிக்கவில்லை என்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து காஞ்சணாபுரியில் ஒரு நினைவுத் தூண் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டு, அதுவும் சிதையும் நிலையில் உள்ளது.
எனவே, ஜப்பானியர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்த மலேசியர்களின் குடும்பத்தினருக்குத் தகுந்த இழப்பீடும் அங்கு மரணமடைந்தோரைச் சிறப்பிக்கும் வகையில் நினைவுத் தூண் ஒன்றையும் அரசு நிறுவ வேண்டுமென சந்திரசேகரன் கேட்டுக் கொண்டார்.
