
🔊To listen to this news in Tamil, Please select the text.
நஜிப் ரசாக் காலத்தில் சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட அபாண்டி அலியை, துன் மகாதீர் அதிரடியாகப் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து, அவர் அரசின் மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அதன் பின்னர் அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட சமரச உடன்பாட்டில், ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு இழப்பீடாக அளித்திருந்தது.
அது பற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஓஸ்மான் அரசுக்கும் அபாண்டி அலிக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வழங்கப்பட்ட இழப்பீடு அரசின் ரகசிய காப்பாக வைக்கப்- பட்டிருப்பதால், வழங்கப்பட்ட தொகையை பொதுவெளியில் அறிவிக்க இயலாது என்று தெரிவித்திருந்தார்.
அதனைச் சாடியிருந்த மகாதீர், உண்மையில் அபாண்டி அலியை பதவியிலிருந்து நீக்கியதற்கு அரசு இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்றும் தமக்குப் பின் வந்த அரசாங்கம் இழப்பீடு வழங்கி அதனை ரகசிய காப்பாக வைத்திருப்பது ஏற்கத் தக்கது அல்லவென்றும் குறிப்பிட்டிருந்தார்.
3 ஆண்டு ஒப்பந்தத்தின்படி அபாண்டி அலி July 27, 2015 யிலிருந்து July 26, 2018 வரையில் பதவியில் நியமிக்கப்பட்டு, அவரது பதவி மீண்டும் நீட்டிக்கப்படும் என உறுதி கூறப்பட்டதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டார்.
ஆனால், மகாதீர் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர், அபாண்டி அலி முன்னாள் பிரதமர் 1எம்டிபி வழக்கில் குற்றமற்றவர் என கூறி தற்காத்ததை அடுத்து, அவர் தமது பொறுப்பில் நேர்மையின்றி நடந்ததாகக் குற்றம் சாட்டி, மகாதீர் அவரை 2018 ஜூன் 5ஆம் தேதி பதவியிலிருந்து அகற்றியது குறிப்பிடத்தக்கது.



