
🔊To listen to this news in Tamil, Please select the text.
வாழ்க்கைச் செலவினத்தால் அவதியுறும் மக்களின் சுமையைக் குறைக்க அரசு 6,400 கோடி ரிங்கிட்டை அரசு ஒதுக்கும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
அத்தொகையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் உதவி நிதியாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீஅமான் எம்பி டோரிஸ் சோஃபியா புரோடியின் மக்களவையில் எழுபிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை நாட்டின் உட்புறங்களில் விநியோகிக்க 22.5 கோடி ரிங்கிட் செலவிடப்படும். பி40 பிரிவு மக்களுக்கு உதவ, Sumbangan Rahmah (சும்பாங்கான் ரஹ்மா) ரொக்க உதவி வழங்கப்படும். ஜனவரியில் வழங்கப்பட்ட முதல் கட்ட நிதியுதவிக்கு 167 கோடி ரிங்கிட் 8.7 மில்லியன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் இரண்டாம் கட்ட நிதியுதவியை 9 மில்லியன் பேருக்கு வழங்க அரசு 800 கோடி ரிங்கிட்டை செலவிடும்.
மேலும், 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் ரஹ்மா குறைந்த விலையிலான பொருள்களை விநியோகிக்க 10 கோடி ரிங்கிட் செலவிடப்படும் என்றும் அந்தப் பொருள்கள் சந்தை விலைக்கு 30 விழுக்காடு குறைந்திருக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



