
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய நான்கு மொழிகளைக் கொண்ட உலகின் முதல் ஆத்திச் சூடி நூல் இன்று வெளியிடப்பட்டது.
மலாயாப் பல்கலைகழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஒத்துடைப்புடன் தமிழ் மொழி காப்பகம் இந்த நூலை வெளியிட்டது.
அத்துடன், தமிழ் கலைச்சொற்களின் தொகுப்பு, இயங்கு படக் காணொளி களஞ்சியம் ஆகியவற்றையும் அவ்வமைப்பு வெளியீடு செய்தது.
தமிழ் மொழி காப்பகத்தின் அந்த மூன்று படைப்புகளையும் இன்று கல்வி துணையமைச்சர் லிம் ஹுய் யிங் ( Lim Hui Ying ) அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் , தமிழ் மொழி தொடர்பான அரிய பணிகளில் ஈடுபட்டு வரும் மலேசிய தமிழ்மொழி காப்பகத்திற்கு 20,000 ரிங்கிட் மான்யம் வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
முன்னதாக அந்த அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய துணையமைச்சர் , தமிழ் மொழி காப்பகத்தின் இந்த 3 படைப்புகளும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு மட்டுமல்ல , மலேசிய கல்வியாளர்களுக்கும் உலகம் முழுவதுமுள்ள தமிழ் பற்றாளர்களுக்கும் நல்ல பயனாக அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்துடன் இந்நிகழ்ச்சி வெற்றியடைய, நன்கொடையும் நிதியாதரவும் செய்த , NLFCS – நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன் , SATAKE நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஜே. பழனியப்பன், மைநாடி அறவாரியம் ஆகியவற்றுக்கும் துணையமைச்சர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் .



