
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடிக்கும் இடையே வாராந்திர அடிப்படையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கைரி ஜமாலுடின் பரிந்துரைத்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தில் சரிபார்பார்த்து சமன் செய்யும் பணியை செவ்வனே செய்வதை நிரூபிப்பதற்குரிய தளமாக இந்த விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ரெம்பாவ் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சொன்னார்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பிரதமருடனான கேள்வி பதில் அங்கத்திற்கு முன்பாக இந்த இந்த விவாதத்தை நடத்தலாம் என்று அவர் பரிந்துரை செய்தார்.
பிரதமர் களத்தை திறந்துள்ளார். பிரதமருடன் கேள்வி பதில் அங்கத்தை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். முன்பு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் “மோதல்“ போன்ற ஒரு அங்கத்திற்கு பரிந்துரை செய்வேன். முதல் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கும் வகையில் இந்த அங்கம் அமையும் என்றார் அவர்.
இங்கிலாந்தில் இருப்பதைப் போல் எதிர்க்கட்சித் தலைவர் நிழல் பிரதமருக்குரிய அந்தஸ்துக்கும் தன்னை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பினை பெற முடியும் என்று கைரி சொன்னார்.



