
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த அரசாங்கத்திற்கு மூன்று ஆணடுகள் தேவைப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இப்பிரச்சனையை அரசாங்கத்தால் ஓராண்டு காலத்தில் தீர்க்க முடியாது என்று அவர் சொன்னார்.
பிரச்சனைக்கு முழுமையாகத் தீர்வு காணும் விதமாக அனைத்து 4,000 ஒப்பந்த மருத்துவர்களையும் நிரந்தரமாக பணியமர்த்தினால் அரசாங்கத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 1,000 கோடி வெள்ளி தேவைப்படும். இது சாத்தியமில்லாதது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இவ்வாண்டில் 1,500 பேரை நியமனம் செய்கிறோம். அடுத்த ஆண்டில் அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார் அவர்.
இது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சனையாகும். அனைத்தையும் ஒரே ஆண்டில் தீர்த்து விடும்படி நிர்பந்திக்கக் கூடாது. 300 கோடி வெள்ளி என்பது சிறியத் தொகை அல்ல என்று அவர் தெரிவித்தார்.
மொத்தம் 4,186 ஒப்பந்த அடிப்படையிலான சுகாதாரப் பணியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பொதுச் சேவைத் துறையினால் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தது.
அந்த ஒப்பந்த சுகாதாரப் பணியாளர்களில் 3,586 மருத்துவர்கள், 300 பல் மருத்துவர்கள் மற்றும் 300 மருந்தக அதிகாரிகளும் அடங்குவர்.



