
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை வரும் மே மாத மத்தியில் நடைபெறவுள்ளதாக மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
செர்டாங், மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) நடைபெறும் இந்த இரண்டு நாள் சந்தையில் சுமார் 200 முதலாளிகள் கலந்து கொண்டு 30,000 வேலை வாய்ப்புகளை வழங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சந்தையில் சுற்றுலா, உற்பத்தி ஹோட்டல், உபசரணை துறைகளோடு மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறவிருக்கும் தேதியை நாங்கள் விரைவில் அறிவிப்போம். வேலை தேடுவோர் முன்கூட்டியே தங்களின் விபரக்குறிப்புகளை தயார் செய்து கொள்ளாம் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட வேலை வாய்ப்புச் சந்தை பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. இச்சந்தையில் பங்கேற்றவர்களில் 1,060 பேர் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றனர்.



