32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

அன்பில்லார் கையால் உண்பது கொடிது – தெய்வீகன் ஆறுமுகம்.

🔊To listen to this news in Tamil, Please select the text.

(ஏறக்குறைய 12 ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். கோலாலம்பூர், சுல்தான் அஸ்லான் ஷா சாலையில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதி மாநாட்டு மண்டபத்தில் தமிழறிஞர் டத்தோ ஆ.சோதிநாதன் தலைமையிலான மயில் பதிப்பகம் திருக்குறள் நூலை வெளியிட்டது. மலாய் மொழியிலும் விளக்கம் இடம்பெற்ற திருக்குறள் விளக்கவுரை நூல் அதுவென நினைவு. அந்த நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அசரவைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பிரமுகர்களில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனும் ஒருவர். “குற்றவாளிகளை ஓரளவிற்குத்தான் திருத்தவும் பக்குவப்படுத்தவும் முடியும். அவர்கள், தாங்களாகவே காலத்தால் திருந்தினால்தான் உண்டு” என்று ஒரு முத்தான கருத்தைச் சொன்னார்.

அப்படிப்பட்டவர்களிடம் இந்தத் திருக்குறள் நூலைக் கொடுத்தால், படிப்பத்தற்குப் பதிலாக, பாரமான இந்து நூலைக் கொண்டு மற்றவர்களை அடிக்கவும் பயன்படுத்துவார்கள் என்றும் பேசினார்.

இப்பொழுது பணி ஓய்வுக்குப் பின் நூலாசிரியராகவும் இலக்கியப் படைப்பாளராகவும் உருமாறியுள்ள இவர், தமிழ் மூதாட்டி ஔவையின் அடிகளை அடித்தளமாகக் கொண்டு ஒரு செம்மாந்த கட்டுரையைப் படைத்துள்ளார்.

ஒருசில ஒற்றுத் திருத்தத்தைத் தவிர, அவரின் எண்ண வடிவம் முழுவதும் சிந்தாமல் சிதறாமல் இதோ தொடர்கிறது)
-நக்கீரன்

கொடிது கொடிது
வறுமை கொடிது!
அதனினும் கொடிது இளமையில் வறுமை!
அதனினும் கொடிது
ஆற்றொணாத் தொழுநோய்!
அதனினும் கொடிது
அன்பிலாப் பெண்டிர்! அதனினும் கொடிது
அவர் கையால் இன்புற
உண்பதுதானே ! என்று பாடிய ஔவை,

எல்லாவற்றிலும் கொடிது….அன்பில்லார் கையால் உண்பதுதானே என்றார்

ஏன் அவ்வாறு சொன்னார்? அன்னம் பாலிப்பதும், அமுதூட்டுவதும் அன்-னையரின் அருஞ்சேவையாகும். அன்னத்தை சமைக்கும் அருங்கை உணவு-தான், குடும்ப உறுப்பினர்களின் எண்ணத்தையும் சமைக்கவல்லதா? ஆக அன்னச் சமையலுக்கும், பிள்ளைகளின் எண்ணச் சமையலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

இளையோர் சமூகத்தில் இன்று இத்தனைக் கேடுகள் விளைவதற்கு யாது காரணம்? உலகில் எங்கெங்கும், ஏதங்களும் இழிவுகளும், சமுதாய நோய்க-ளும் நிறைந்த இந்த நிலைக்கு எதுவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும்?

இது மேற்கத்திய உலகில் மட்டுமல்லாது, உலகெங்கினும் வியாபித்து இருக்கின்றது.

ஏன்? நமக்கும்கூட இங்கே அதே நிலைதான். அமெரிக்கர்களை நாகரீக முன்னோடிகள், என நம்பியதில் தவறில்லை. அகம் புறம் என்ற வாழ்க்கை முறையில், புறநாகரீகம் மேனாட்டில் விரைந்து வளர்ச்சி கண்டாலும், அக நாகரீகம் என்பதும் அங்கேயும் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இன்று கேள்விக்குறியாகத்தான் மாறிவிட்டது.

எப்பொழுது நாம் அந்த சமூக உளவியல் பாதிப்பையும், வித்தியாசத்தையும் அறியாமல் பின்பற்றத் துவங்கினோமோ, அன்றே நாமும் குருடும் குருடும் ஆடும் குருட்டாட்டத்தில் மாட்டிக்கொண்டோம்.

பின் நடந்தது என்ன?

மிக சாதாரண விஷயம்தான்.

வீட்டில் சமைத்து உண்ணும் நடைமுறைக் கலாச்சாரம் என்று தளர்ந்தும், பின்னர் நின்றும்போனதோ, அப்பொழுதே தீய விளைவுகள் ஆரம்பித்துவிட்டன;

நாம் கிஞ்சிற்றும் எதிர்பாராத,
இளையோர் சமுதாயக் கேடுகள்.

1970கள் வரை, அமெரிக்காவில் ஏறத்தாழ 80% கணவன் – மனைவி குடும்ப வாழ்க்கையும் குழந்தைகளோடான குதூகல வாழ்க்கையும் குடும்பத்திற்குத் தேவையான உணவு சமைக்கும் உன்னதப் பணியும் சேவையும் தாய்மாரால் கவனிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட சமூக, அறிவியல், தொழில் நுட்ப மாற்றம் மற்றும் வளர்ச்சியின் காரணமாக, அந்த தெய்வீகப் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்தபோதே, அமெரிக்க ஆங்கிலேய சமுதாயத்தில், சமூகக் கேடுகளுக்கு உரம் போட்டாகிவிட்டது. அதன் விளைவுகளை அறியாது, நாமும் இந்த சமூக- பொருளாதாரக் கவர்ச்சி நிறைந்த வளர்ச்சிப் போட்டியில் மேற்கத்திய நாடுகளை, முன்னுதாரணமாகக் கொண்டு அந்த அறியாமை வலையில் விழுந்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்.

எப்பொழுது பத்துமாதம், நாம் உடலோடும் உயிரோடும் கலந்து, பிணைந்து, சுமந்து உருவாக்கிய குழந்தைகளை, இரத்த உறவோ, பரிச்சயமோ இல்லாத வேற்றின வாடகைத் தாதியரின் (எ) பணிப்பெண்களின் பராமரிப்பில் விட்டுவிடத் தொடங்கினோமோ, அன்றே நெஞ்சார்ந்த உளமும் உளவியல் வளமும் நேர்மைத்திறமும் அழகிய கலாச்சரமும் பண்பாடும் அழுகத் தொடங்கிவிட்டன.

குடும்ப உறுப்பினர்களைப் பாசப்பிணைப்போடு பிணிக்கும் அன்புகலந்த வீட்டுச் சமையல், வெறுமனே சமையல் மட்டுமல்ல. குடும்ப உறுப்பினர்களைப் பாசத்தால் கட்டிப்போடும் அன்புக் கலை; சமையல் கலை. சமைக்கும்போதே, அதில் பாசத்தையும் கொட்டி கொட்டி, ஆசை ஆசையாக சமைக்கும் உணவு, அன்பை வளர்க்கும் உரம்; குணத்தையும், பாசத்தின் தரத்தையும் உயர்த்தும் வரம்; தாய் தன்குழந்தைகளுக்குப் பிடித்த உணவைத் தேடித்துழாவி சமைக்கும் பொழுதும்; ஒரு காதல் மனைவி தன் கணவனுக்குப் பிடித்த உணவை, அவனுக்குப் பிடித்த விதத்தில், சக்கரையும், உப்பும், புளிப்பும், உறைப்பும் சேர்த்து சமைக்கும்போதும்; அப்படி சமைத்த உணவை அருகில் நின்று, தன் கையால் பரிமாறி, அவன் உருசித்து உண்ணும்போது அவன் முகத்தில் ஏற்படும் முகமலர்ச்சியைப் பார்த்து ரசித்து, பூரிப்புடன் மனம் நிறைவடையும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கின்றதே, அது மனித குலத்திற்கும்…., மனுஷ்ய குடும்பத்திற்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பேரின்பம்; கிடைப்பதற்கு அரிய வரப்பிரசாதம். ஆனால் ஒன்று மிக முக்கியம். தன் கணவனோ, தன் குழந்தையோ, அல்லது தன்வீட்டுக்கு வந்த விருந்தோ, அவர்களின் அந்த உண்ணும் அழகையும், உவகையையும் கண்டுகொள்ளும் கண்வேண்டும். அப்படிப்பட்டக் கண்கொண்ட பெண் முன்னில் உண்பதே பெரிய வரம். நிற்க.

சமையல் நடைபெறாத வீடும் வெறும் படுக்கை அறை மட்டுமே உள்ள விடுதி அறையும் ஒன்றுதான். அதில் அன்புணர்வுக்கும் போற்றும் பண்புணர்வுக்கும் இடமே இல்லை.

அன்பு, பண்பு, நேசம், பாசப் பிணைப்பு, குடும்ப ஒற்றுமை அனைத்தும் பிண்ணிப் பிணைந்து தளிர்விட்டு, முளைத்து, தழைத்து வளர்ந்து, ஆலம் விழுதுகள்போல் வளர்வது, இறையமுதும், நிறையமுதுமாகிய வீட்டுச் சமையலால்தான்.

இதை யாரே உணர்கின்றார்.
தெண்ணிர் அடுபுற்கை ஆயினும், தன் மனைவி கையால் சமைத்ததெனின், ஊங்கினியது இல் அல்லவா?

உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல; சீரிய சிந்தனை வளமும், உள்ளத்தின் சீரான செயல்பாடும் அன்பு நிறைந்த வீட்டுச் சமையலைத்தான் சார்ந்துள்ளது என்று அதே அமெரிக்க நாட்டு ஆய்வுகள் சொல்வதாக அறியப்படுகிறது.

மேலும் 1970களில் மேற்கத்திய நாடுகளில் ஏறத்தாழ 80 விழுக்காடு கணவன் மனைவி குழந்தைகள் என சேர்ந்து வாழ்ந்த குடும்பங்கள், இன்று 22 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. முதுமை அடைந்தப் பெற்றோர்கள், சுயவிருப்பத்தின் பெயரிலும்; தங்களின் குழந்தைச் செல்வங்க-ளின் வாடியும் வரண்டுமிட்ட அன்பினாலும் பெரும்பாலும் முதியவர் இல்லங்-களிலும் தாதியர் பராமரிப்பிலும் வாழவேண்டியச் சூழல் உருவாகியுள்ளது.

பொதுவாக தனித்து வாழும் ஆண்கள் 12%; தனித்து வாழும் பெண்கள் 15%; தனித்து வாழும் தந்தையர் அல்லது அன்னையர் 19 விழுக்காடாகவும் இருப்ப-தாக அறியப்படுகிறது. அதேவேளையில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் 6%. பிறக்கும் குழந்தைகளில் 38%, திருமணம் செய்துகொள்ளாத பெண்களிடம் பிறப்பதாகக் கூறப்படுகிறது. ஏறத்தாழ, 52% திருமணங்கள் மணமுறிவில்-விவாகரத்தில் முடிகின்றன. இரண்டாம் திருமணமும், ஏறத்தாழ 67%, பிரச்சினைகளைக் கொண்டதாக முடிகிறது.

ஒருசிலபலருக்கு, திருமண பந்தம் எனும் சொர்க்கம் நரகமாக மாறி, எந்த ஒரு மரியாதையும் இல்லாத விந்தையாக முடிகிறது. குற்றச்செயல்களும், குடி-போதையும், ஆட்கொல்லி போதைப் பொருட்களும் வன்முறையும் மேற்கத்திய நாடுகளில் பெருகிவரக் காரணமே, குடும்பம் என்றக் கட்டமைப்பின் அஸ்திவாரம் ஆட்டங்கண்டு வருவதால்தான்.

அதற்கான ஆரம்பமே, நிரந்தரமாக வீட்டுச்சமையலை நிறுத்திவிடுவதுதான்.
வாரத்தில் ஒரு நாளோ, அல்லது இரு நாளோ, ஏற்றுக் கொள்ளலாம். தினமும், வாரந்தோறும், Grab Food; Fast food என்கிறபோதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

இல்லறம் என்ற கட்டமைப்பே இடிந்துவிழும் அளவிற்கு போய்விடக் காரணம், இல்லாத்தரசிகளின் இதயங்கனிந்த….., இன்றியமையாத இன்பச் சமையல், இல்லாமல் போனதுதான் என்றால் அது மிகையாகுமா?

நமது சமுதாயமும், மெதுவாக இந்தச் சூழலை நோக்கித்தான் செல்கின்றதோ அல்லது சென்றுவிட்டதோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

The way to a man’s heart is through his stomach என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. அதை நன்கறிந்தவர்கள் அந்நாளின் பேரிளம் பெண்கள் மட்டும்தான் போலிருக்கின்றது.

எனைவகையான் தேறியக் கண்ணும்- வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்(குறள் 514)

என்றார் வான்புகழ் வள்ளுவர்; அதாவது, ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ, எத்தனை அழகும், அறிவும், உடல்வாகும் இருந்த போதிலும், தான் செய்யும் செயலை செவ்வனே செய்து முடிக்கும் செயற் கலையும் செய் திறனும் இல்லையாயின், அவர்களால் முழுமையான சிறப்பை எய்தமுடியாது. செய்திறன் மிகுந்தவர் நிறைந்த சமுதாயம் விரைந்து வெற்றியும் புகழும் அடையும்.

அதுபோல், எந்தப் பெண்ணுக்கும், வேறெந்த சிறப்புகள் இருப்பினும், வேறுபடினும்; தன் அன்புகலந்த சமயலாலும், விருந்தோம்பும் பண்பினாலும், வென்று பிணிக்கும் சால்பு இல்லையெனின்,

அது, முத்தும் வைரமும் வைடூரியமும் பதிக்கப்படாத வெறும் அட்டிகை மட்டுமே; அது தங்கத்தினால் ஆனது என்றாலும் கூட அதன் மதிப்பும் மௌசும் குறைவுதான்.

வாய்க்கு உருசியான காலை உணவு; மதிய உணவு, இரவு உணவு என்று சமைக்கும் மனைவியின் கைக்கு அன்பு கலந்த முத்தம் தரும் கணவன்மார்; தாயின் சுவையான சமையலுக்காக ஓடோடி வரும் அன்பு குழந்தைகள் ஆகிய இரு தரப்பாரையும் இன்று காண்பது அரிது.

ஆராரோ, ஆரிவரோ என்று தாலாட்டிப் பாலூட்டும் பழக்கமே மறைந்து போய்விடும்(போய்விட்டது)போல் தெரிகிறது. சின்ன சின்னக் குட்டி குழந்தை கள்கூட கையில் பிடித்திருக்கும் கைக்கருவியில், கார்ட்டூன் பார்த்துக் கொண்டுதான், பால்குடிப்பதும், உணவருந்துவதுமாக இருக்கின்றன.

தாய்க்குரலின் பாடலின்வழி உருவாகும் இசையமுத அன்பு வெளிப்படு-வதில்லை.

இப்பொழுதெல்லாம் அழகான பெண்களையும் அழகான இளைஞர்களையும் அதிகமாகவே காண்கிறோம். ஆனால், உளமார்ந்த நேசமும் உள்ளன்பும் காண்பதரிதாகிறது. மேலே குறிப்பிட்ட வீட்டு சமையல் பிரச்சினையோடு, புதிய அட்டகாசமாக தொலைகாட்சித் தொடர்களும் கைக்குள்ளேயே கைவிலங்கிடப்பட்ட கைத்தொலைபேசிகளும் சமுதாய-குடும்ப உறவுகளின் தேய்மானத்திற்கும் சீரழிவிற்கும் நடும்பகல்வரையிலான தூக்கம் வேலை- வெட்டியோ சமையலோ செய்வதற்கு சோம்பேறித்தனம், பணிக்கு/கடமைக்கு மட்டம் போடுதல்; நேரத்திற்குச் செல்லாமை; போதைப்பொருளுக்கு அடிமையாதல்; அடிதடி; கலாட்டா; கைகலப்பு; பொதுவிடத்தில் மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் வண்ணம் உறக்கக் கத்திப்பேசுதல்; கைத்தொலைபேசியில் உறக்க ஓசைவைத்து, நீண்டநேரம் இசை கேட்டல்; சத்தமாக நாடகம் பார்த்தல்; பொது இடத்தில் கூச்சல் போடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்; கொலை கொள்ளை; வயதுக்கு மீறிய காதல் விவகாரங்கள் பொது உடைமைகள், தளவாடப் பொருட்களை நாசம் செய்தல் போன்ற நம் சமுதாயத்திற்கு அனாவசியமான அநாகரீக வண்ணம் பூசுவதை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.
கைத்தொலைபேசியும், தொலைகாட்சியும் பாவம் என்ன செய்யும்? அதன் தேவையும், நன்மையும் அபரிதமானது. இருமல் மருந்துபோல. அளவோடு அருந்தினால், இருமலைப் போக்கும் மருந்தாகும். அளவுக்கு மீறி அதிகமாகக் குடித்தால், அதுவும் போதைத் தரும் போதைப்பொருளாகும். நாம்தான், நம் அறியாமையால், அவற்றை துஷ்பிரயோகம் செய்கிறோம். அதற்கு அடிமை ஆகிறோம்.

பாரதியார் சொன்னதுபோல், மனதில் உறுதி வேண்டும். முழுக்க முழுக்கத் தாதியர் கையிலும்; வாரம் முழுவதும் கடைச் சாப்பாடுமாக இருந்தால், நிச்சயமாக நம் இளசுகளுக்கு நல்லுணர்வும் நல்லொழுக்கமும், நன்நடையும் வராது. சிறிதளவு துளிர்கூட விடாது. நம் கடமையையும் பொறுப்பையும் சரியாகவும் விரைவாகவும் செய்துமுடிக்கத்தான் இந்தக் கருவிகளும், வசதிகளும் பயன்பட வேண்டும். பெண்களும் கண்டிப்பாக வேலைக்குப் போய்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலையும் இனி மாறாது. மாறுவதற்கு வாய்ப்பும் அறவே இல்லை. அதனால் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்து உதவும் பொருட்டு உருவானவைகள்தாம் இந்த செயல்வடிவங்களும் தொழில் நுட்பங்களும். இதை அறிந்து, புரிந்துகொள்வதுடன் தெளிவான செயல்பாடும், இருந்தால், குழந்தை வளர்ப்பும் குடும்ப நலனும் சமச்சீராக அமைய உதவும் என எதிர்ப்பார்க்கலாம்.

கொஞ்சம் யோசித்துத்தான் பார்ப்போமே. !

வணக்கம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles