
🔊To listen to this news in Tamil, Please select the text.
பண மோசடி, நம்பிக்கைத் துரோகம், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களின் அடிப்படையில் 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு கிடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகப் பெர்சத்து இளைஞர் பிரிவுத் தலைவர் Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal வான் அமாட் ஃபைஸால் வான் அமாட் கமால் குற்றம் சாட்டினார்.
நஜிப்பிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி நஸ்லான் கஸாலி மீதான எம்ஏசிசியின் விசாரணை அறிக்கை திட்டமிட்டு கசிய விடப்பட்டு, அவரை நேர்மை தவறி நியாயமற்ற முறையில் தண்டனை விதித்துள்ளதானத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒஸ்மான் அந்த விவரத்தை நஜிப்பின் வழக்கறிஞருக்குத் தெரிவித்த வகையில், அவரும் இந்தச் சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக வான் அமாட் குற்றம் சாட்டினார்.
எனவே, நஜிப்பிற்கான மன்னிப்பு விவகாரத்தில் கூட்டுச் சதி நிகழ்வதாக சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்ட அவர், அறிக்கை கசிந்த விவகாரத்தில் எம்ஏசிசிக்கு எதிராகப் பெர்சத்து இளைஞர் பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பக்காத்தான் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே பக்காத்தான் அம்னோவிடம் அச்சம் கொண்டிருப்பது தெரிய வருவதாக அவர் குறிப்பிட்டார்.
