தவத்திரு பாலயோகி சுவாமிகள், டாக்டர் ஜி.குணராஜ்,
‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் இரங்கல்

🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 10:
சுத்த சமாஜம் எனப்படும் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அன்னை மங்கலம் இன்று 98 வயதில் இறைவனடி சேர்ந்தார்.
மலேசியாவின் அன்னை தெரசா என்று போற்றப்பட்ட இவர், நலிந்த மக்கள் சிறியவர்கள்-பெரியவர்கள் என எண்ணற்றோருக்கு அடைக்கலம் அளித்து வந்தார். ஆன்மீக பயணத்தில் தன் மொத்த வாழ்வையும் அற்பணித்த அன்னை மங்கலம், அனைத்து இன மக்களாலும் வணக்கத்திற்குரிய ஆன்மிகத் தலைவராக போற்றப்பட்டவர்.
சிங்கப்பூர் நீரிணைக் குடியிருப்பில் 1926-இல் பிறந்த இவர், கடந்த மேத் திங்கள் 17-ஆம் நாளில் தன்னுடையை 97-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்னை மங்களம், 98 வயதை எட்டிய 25-ஆவது நாளில் முதுமை காரணமாக இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார்.
சுவாமி விவேகானந்தருக்கு வாய்த்த நிவேதிதையைப் போல, தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தைத் தோற்றுவித்த சத்யானந்த சுவாமிகளுக்கு வாய்த்தவர் அன்னை மங்களம் என்றும் மலேசிய இந்து சமய ஆன்மிக வரலாற்றில் அன்னை மங்களத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் மலேசிய அருள்மிகு திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் தலைவர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் புகழுரை வழங்கினார்.
1948-இல் மலேசியாவிற்கு வந்த அன்னை மங்களம், அடுத்த ஆண்டில் உருவான தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யானந்த சுவாமிகளை தன் ஆன்மிக ஆசானாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட அன்னை மங்களம், தன் பொதுவாழ்வை கோலாலம்பூர், பங்சார் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, பின்னர் ஆன்மிக வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
அத்தகைய வாழ்நாள் ஆன்மிக-சமூகத் தொண்டரின் ஆன்மா சாந்திபெற இறைவனிடம் வேண்டுவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜி.குணராஜ் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டத்தின் பாதுகா மங்களம் த/பெ ஐயாசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்னை மங்களம், நூலாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய மூன்று புத்தகங்களில், கோலாலம்பூர் பள்ளிகளைப் பற்றி தமிழில் எழுதிய ஒரு நூலும் ஒன்று.
புறப்பாட மேம்பாட்டு மையத்தின் நன்னெறிக் கல்விக் குழு உறுப்பினர், மலேசிய சர்வ சமய மன்றத்தில் உதவித் தலைவர், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையில் மகளிர் ஒருங்கிணைப்பு குறித்த தேசிய ஆலோசனை மன்ற உறுப்பினர் என்றெல்லாம் அரசு நிறுவனங்களிலும் ஆன்மிக அமைப்புகளிலும் கடமையாற்றி இருக்கிறார் அன்னை மங்களம்.
ஆன்மிக எல்லையைக் கடந்து, சமூக-கல்வித் தளங்களிலும் தொண்டாற்றிய அன்னை மங்களத்தின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது; அன்னாரின் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் அதேவேளை, மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
