27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப் பள்ளிகளை மூடுவதற்கு மறைமுக நடவடிக்கையா?

ஒற்றுமை அரசு தெளிவுபடுத்த வேண்டும்

-எம்.ஏ.பி. துணைத் தலைவர் டத்தோ செல்வம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

பதினைந்து மாணவர்களுக்கும் குறைவாகப் படிக்கும் தமிழ்ப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதற்கும் அதிகமாகப் படிக்கும் சுற்றுவட்டாரப் பள்ளிகளின் வளர்ச்சியிலும் புதுக் கட்டமைப்பிலும் அக்கறை செலுத்தலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ள கருத்து, இந்திய சமுதாயத்தில், குறிப்பாக தமிழ்க்கல்வி ஆர்வலர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசிய துணைத் தலைவர் டத்தோ செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் மற்றும் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் கடந்த சனிக்கிழமை ஜூன் 10, பிற்பகலில் ஷா ஆலம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி பேசியபொழுது, பதினைந்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு மேலும் செலவழிப்பதற்குப் பதிலாக, அத்தகைய பள்ளிகளுக்கு அருகில் அதிகமான மாணவர்கள் படிக்கும் தமிழ்ப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளையும் கட்டட வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

அத்துடன், மிகக்குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வேறுபள்ளிகளுக்கு மாறிச்சென்றால், அவர்களுக்கான பள்ளிப் பேருந்து கட்டணம், தேவைப்படும் தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கும் விடுதி வசதி குறித்தெல்லாம் அக்கறையோடு பேசியுள்ள பிரதமர், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் மீட்சிபற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

இதனால்தான், அத்தகையப் பள்ளிகளை மூடுவதற்காக இந்த அரசு மறைமுக நடவடிக்கையை மேற்கொள்கிறதோ என்ற ஐயத்துடன் சமூக ஊடகங்களில் கடந்த இரு நாட்களாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை இனி குறையாதபடியும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் ஒற்றுமை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் டத்தோ செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles