
🔊To listen to this news in Tamil, Please select the text.
எதிர்வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தலில் ம.இ.கா போட்டியிடுவதற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எம் சரவணன் மறுத்திருக்கிறார். இதற்கு முன் ம.இ.காவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சரியானதல்ல என அவர் தெரிவித்தார். நாங்கள் வெற்றி பெறக்கூடிய செந்தோசா சட்டமன்ற தொகுதியை ம.இ.கா கேட்டிருந்தது. எனினும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்குமிடையே நடைபெற்ற பேச்சுக்களுக்குப் பின் அந்த தொகுதி தொடர்ந்து பி.கே.ஆர் வசம் இருந்து வருகிறது. ஆகவே இதுவரை சிலாங்கூரில் போட்டியிடுவதற்கு ம.இ.காவுக்கு எந்தவொரு தொகுதியும் ஒதுக்கப்படவில்லையென சரவணன் தெரிவித்தார்.
சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் என சிலாங்கூர் ம.இ.கா தொடர்பு குழுத் தலைவர் எம்.பி.ராஜா நேற்றிரவு கூறியிருந்தார். ஷா அலாமில் நடைபெற்ற சிலாங்கூர் தேசிய முன்னணி கூட்டத்திற்குப் பின்னர் அவர் இதனை தெரிவித்திருந்தார் . பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்குமிடையே தொகுதி பங்கீடு குறித்து இன்னமும் இறுதி முடிவு காணப்படவருவதாகவும் அதே வேளையில் தேசிய முன்னணிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
