
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தது ஐந்து மாதங்கள் சம்பளம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் தனக்கு கிடைத்திருப்பதாக கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் உருமாற்றம் திட்டங்களுக்காக மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது. தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஆட்சியிலும் இந்த நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் மித்ராவுக்கு 10 கோடி வெள்ளியை ஒதுக்கியது. மித்ரா மூலம் தமிழ்ப் பள்ளிகளில் பணிபுரியும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் போடப்பட்டது. ஆனால், இப்போது கடந்த 5 மாதங்களாக பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்ற புகார் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார். பக்காத்தான் ஆட்சியில் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த பொன். வேதமூர்த்தியிடம் இதுபற்றி நான் கேள்வி எழுப்பியபோது இந்த பள்ளி ஆசிரியர்கள் சம்பள பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்றார். அந்த அடிப்படையில் அவரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.
இப்போது ஒற்றுமை துறை அமைச்சராக இருக்கும் டத்தோ ஹலிமா பார்வையில் மித்ரா இருக்கிறது.

ஆகவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். ஆசிரியர் தொழில் என்பது ஒரு புனிதமானது. தற்போது நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பல பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் சிரமப்படும். காலம் தாழ்த்தாமல் மித்ரா இந்த பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை போட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
