25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மலேசிய இந்து சங்கத்தின் மகுட விழா: 45-ஆவது தேசிய திருமுறை விழா – சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

பெட்டாலிங் ஜெயா, செப்.14:
மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக தேசியத் திருமுறை விழாவை எட்டியுள்ளது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு கொண்டாடப்படும் 45-ஆவது தேசியத் திருமுறை விழா மலேசிய தேசிய தினமான செப்டம்பர் 16-ஆம் நாள், முழுநாள் நிகழ்வாக சிரம்பான், பண்டார்ஸ்ரீ செண்டாயான், ‘மெட்ரிக்ஸ்’ பன்னாட்டு பள்ளி வளாகத்தில் காலை 7:00 முதல் மாலை 6:00 மணிவரை நடைபெற உள்ளது.

அண்மைக் காலமாக 120 வட்டாரப் பேரவைகளின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் நடைபெற்ற திருமுறைப் போட்டிகளை அடுத்து, 14 மாநிலப் பேரவைகளின் திருமுறை விழாக்களும் நடைபெற்று, சிவநெறிய சிந்தனை இந்துக்களின் மனதை ஆட்கொண்ட நிலையில் தற்பொழுது தேசியத் திருமுறை விழா நடைபெறுகிறது என்று ‘சங்கபூசன்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 58 ஆண்டுகளாக இந்து சமய காவல் அமைப்பாக மலேசியாவில் விளங்கும் இந்து சங்கம், திருமுறை விழாக்களின்மூலம், இலட்சக் கணக்கான மக்களின் மனப் பாத்திகளில் சிவநெறியப் பயிரையும் தமிழையும் ஒருசேர வளர்த்து வருகிறது என்பதை இந்து சங்கம் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்கிறது.

திருமுறை ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி, பெரிய புராணம் ஓதுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்கள், பெரியவர்கள், திருமுறை நடுவர்கள், குடும்ப உறுப்பினர்கள், விழா ஏற்பாட்டாளர்கள், இந்து சங்க தேசிய-மாநில-வட்டாரப் பொறுப்பாளர்கள், இந்து சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்து ஐந்நூறு பேர் பாரம்பரிய உடையில் சிரம்பான் மாநகரை நோக்கி படையெடுக்கும் இந்த 45-ஆவது தேசியத் திருமுறை விழா, சிற்றுண்டி உபசரிப்புடன் காலை ஏழு அளவில் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து, சிவாச்சாரியார் டாக்டர் ஆனந்த் கோபி தலைமையில் நடைபெற இருக்கும் சிறப்பு பூசனை, கொடியேற்றம், நடராஜர்-அன்னை சிவகாமி சமேதர், மற்றும் நால்வர் பெருமக்களின் ஊர்வலம், இறைவணக்கம், இந்து சங்க எழுச்சிப் பாடல், இந்து சங்க தேசிய செயலர் கே.மாணிக்கவாசகத்தின் வரவேற்புரை, இந்து சங்க துணைத் தலைவர் கணேஷ் பாபுவின் சிறப்புரை, மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணனின் சிறப்புரைக்குப் பின் ஒன்பது மணி அளவில் திருமுறைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன.

மதிய உணவுக்குப்பின், தங்கப் பதக்கப்போட்டி, சிறப்புத் தலைவர்கள் வருகை, இந்து சங்க தேசியத் தலைவர் உரை, மஇகா இந்நாள்-முன்னாள் தலைவர்களான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகியோரின் சிறப்புரை, தேவார நாயகப் பதக்கம மற்றும் ஆறு தங்கப் பதக்கங்களுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு, தொடர்ந்து நன்றியுரையுடன் மாலை 6:00 மணியுடன் இந்த விழா நிறைவுபெறும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள தங்க. கணேசன், இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்க பரிசளிப்பு நிகழ்ச்சியிந்போது இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles