
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிள்ளானில் ஒரு உணவகத்தில் இரண்டு மாதச் சம்பளம் பிடிக்கப்பட்டதாலும், ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வேலை வாங்கியதாலும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளனர் இந்திய நாட்டு பிரஜைகள் நால்வர். விடுமுறை நாட்களில் வழங்கப்படும் சாப்பாட்டிற்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
23லிருந்து 26 வயதுக்கு உட்பட்ட அவர்கள் 8 நாட்களாக நடைப்பாதையில் தங்கி பாதசாரிகள் ஒரு சிலர் கொடுத்த உணவை மட்டும் உட்கொண்டு அல்லல் பட்டு வந்திருக்கின்றனர்.
இந்திய தூதரகத்தில் புகார் கொடுக்கப்பட்டும் முறையான உதவிகள் ஏதும் கிடைக்காததால் அந்நால்வரும் தன்னை தொடர்புக் கொண்டதாக மலேசிய உலக மனிதநேய அமைப்பின் தலைவர் கமலநாதன் கூறியிருக்கின்றார். விவரம் அறிந்து நேரடியாக சென்று பார்வையிட்ட அவர் கோலாலம்பூரில் நடைப்பாதையில் தங்கியிருந்த அவர்களுக்கு உணவு வழங்கியதோடு செந்தூல் போலிஸ் நிலையத்திலும் அவர்களை புகார் செய்ய வைத்திருக்கிறார்.
அதே சமயத்தில் தொழிலாளர் நீதிமன்றத்திலும் புகார் அளித்து மனித வள அமைச்சர் கவனத்திற்கும் கொண்டுச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் சட்டத்தின் கீழ் நீதி கிடைக்க முயற்சி எடுக்கவுள்ளதாக கமலநாதன் கூறினார்.



