29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

நடிகமணி எம்.எஸ் மணியம் மறைவு:கூட்டுறவு சங்கம் இரங்கல்

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், அக்.06:
மலேசியத் தமிழ்க் கலைமன்றத் தலைவர் ‘நடிகமணி’ எம்.எஸ் மணியம் திடீர் மறைவுக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தமிழ்க் கலைமன்றத் தலைவராக விளங்கிய எம்.எஸ் மணியம், மலேசியத் தமிழ் மேடை நாடகத்திற்கும் இலக்கிய மறுமலர்ச்சிக்கும் பெரிய அளவில் தொண்டாற்றியவர். இவர் இயற்றிய ‘1941’ நாடகம் மேடை கண்டபோது, பெரிதும் பாராட்டப்பட்டார். அந்த நாடகத்தில், துன் சாமிவேலு நாயகனாக நடித்தார்; டத்தோ வி.கோவிந்த ராஜுவும் அதில் நடித்திருந்தார். மஇகா மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டியின் தாயார்தான் இந்த நாடகத்தில் சாமிவேலுவிற்கு இணையராக நடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

எம்.எஸ். மணியத்திற்கு நடிகமணி என்னும் பட்டத்தை வழங்கியவர் துன் சாமிவேலுதான் என்று எம்.எஸ். மணியம் குறித்து டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் நினைவுகூர்ந்தார்.

டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் ஸ்டேடியம் நெகாராவில் மூன்று அரசர்கள் என்ற நாடகத்தை அரங்கேறியபோது, அதை இயக்கியவர் எம்.எஸ்.மணியம்தான்; துன் சாமிவேலுவிற்கு சிறப்பு செய்த அந்த நாடகத்தில் சேர, சோழ, பாண்டியர்களாக நடித்த மூவரில் எம்.எஸ். மணியமும் ஒருவர்.

நாடகத்தை இயக்கவும், இயற்றவும், அதில் நடிக்கவும் வல்லவரான எம்.எஸ்.மணியம், சிறந்த குரல் வளமும் கொண்டவர். 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கிய இவர், அண்மைக் காலமாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் கலை-பண்பாட்டு அறவாரியம் படைத்த மேடை நாடகங்களுக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளதாக கூட்டுறவு சங்க செயலாளரும் கலை-பண்பாட்டு அறவாரியத்தின் செயலாளருமான டத்தோ பா.சகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, அதை நாடகமாக அரங்கேற்றிய எம்.எஸ். மணியம், டான்ஸ்ரீ கலை-கலாச்சார வாரியாத்தின் கரிகாலன் நாடகத்தை அரங்கேற்றுவதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த வேளையில் அவர் மறைந்தது கலை உலகிற்கு பெரும் இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மலேசியத் தமிழ்க் கலை உலகினருக்கும் தேசிய நில நிதி கூடுட்றவு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக டத்தோ பா.சகாதேவன் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles