
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.14:
அந்த நாள் முதல் இந்த நாள் வரை கோடிக் கணக்கான உயிர்களை பலிகொண்ட பின்னும் குடம் குடமாக மனித ரத்தத்தை வெதுவெதுப்பு குறையாமல் உறிஞ்சிய பின்னும், இன்னமும் கொலைவெறி அடங்காமல்.., இரத்தவேட்கை தீராமல்.., குருதிக் கவிச்சை வீசியபடி இப்பொழுது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடைப்பட்ட காஸா முனையில் மையம் கொண்டிருக்கும் மதவாதப் பிடாரியே, உன்னுடைய குரல்வளை நெறிக்கப்பட்டு, உன் கழுத்து முறிக்கப்படும் நாள், எந்த நாளோத் தெரியவில்லை.
இன்னும் எத்துணைக் காலத்திற்கு மனித உயிர்களைக் குடிப்பாய்? இன்னும் எவ்வளவு டிஎம்சி குருதி தேவைப்படுகிறது உனக்கு?
நீ தற்கொலை செய்துகொண்டு, உலக மானுட குலத்தை வாழவைக்க மாட்டாயா??
அன்பும் அறமும் ஒருசேர, ஈதலும் இசைதலும் கரம்கோக்க உலக மக்கள் யாவரும் அன்பணைய, ஒருமித்து, ஒன்றாக வாழும்நாள் வாய்க்க வேண்டும் என்றால், மதவாதமே நீ மாய்ந்துவிடு! நாளையென சாக்குகூறாமல் இன்றோடு ஒழிந்துவிடு!! பின்னர் என போக்குகாட்டாமல் மதவாதமே நீ, இக்கணமே மாண்டுவிடு!!!
இந்த உலகில் அதிகமான மதக் கருவை சுமந்த இந்தியாவின் வடபுலத்தில், கருணையும் காருண்யமும் குடிகொண்டிருப்பதாக சொல்லப்படும் ஒரு வழிபாட்டு தலத்தில் வழங்கப்பட்ட பிரசாதம் என்னும் அருளுணவை, அவ்வழியே சென்றபோது தானும் வாங்கி உண்ட ஒரு வழிப்போக்கர் இஸ்லாமியர் என்பதை அறிந்து, அவரைப் பிடித்து, ஒரு தூணில் கட்டிவைத்து அடித்தேக் கொன்ற மதவாதப் பிசாசே உனக்கு அழிவே வராதா?!
ஏ மடமிகு மதவாதமே, உனக்கு மூளை வறண்டுவிட்டது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்; அதனால் உனக்கு சிந்திக்கவும் தெரியாது என்பதும் புரியும்; ஆனால் உள்ளம் என்பதுகூடவா உன்னிடத்தில் இல்லை; அப்படி இருந்தால், அதனோரத்தில் கொஞ்சமாவது ஈரம் ஒட்டிக் கொண்டிருக்குமே;
ஈ, எறும்பு, பல்லி, எலி, அணில், மூஞ்சுறு, பார்த்தவுடன் மிரளும் பாம்பு, பூனை, நாய், புறா, கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் வழிபாட்டு தலங்களை உண்டு-உறைவிடமாகக் கொள்வதை ஏற்கின்ற மதவாதம், பசித்த வயிறுடன் புசித்த மனிதனைக் ஈவிரக்கமின்றி கொல்கிறது!
திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து சுயமரியாதைக் கருத்துகளை பேசிவந்த பாரூக் என்ற முப்பது வயது இளைஞரை கடந்த 2017, மார்ச் 16-இல் இருட்டு வேளையில் அநியாயமாக கொலைசெய்த குருட்டு மதவாதமே, உனக்குத் தெரிந்ததெல்லாம் அவைதான் என்பது தெரிந்த சங்கதிதான்!
இந்த மலையக மண்ணிலும், மதம் சார்ந்து அரசியல் பேசும் மதப்பித்து கொண்டதுகளும் உண்டு; ஒன்றுகலந்து ஒருமித்தே வாழும் இந்நிலத்து கூட்டு சமுதாயத்தில், அதுகள், அடிக்கடி மதவாத பாத்திபிரிப்பது கண்கூடு; மலேசியாவில் லஞ்சம் தலைவரித்து ஆடுவதற்குக் காரணம், முஸ்லிம் அல்லாதோரும் மலாய் அல்லாதோருமே முழுக் காரணம் என்று முழுதாக பொய்யுரைக்கும், அதுகள்.
இவ்வாறு ஊரெல்லாம் சுற்றி, உலகெலாம் இரத்த வேட்டை ஆடிய மதவாத பூதமே நீ இப்போது, மேற்குக் கரையில்-காசா முனையில் கொலு கொண்டிருப்பது எங்களுக்கு தெரியாதென்றா நினைக்கிறாய்?

அண்ணல் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையுடன் இணைந்த ஜெருசலம் நகரை இஸ்லாமியர்கள் புனிதமான இடமாக கருதுகின்றனர். முகமது நபி இங்கிருந்துதான் விண்ணகம் சென்று, பின்னர் திரும்பினார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
கிறிஸ்துவர்களோ, பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து தனது இறுதி காலத்தில் வாழ்ந்த இடம் ஜெருசலம் என்றும் அவர் உயிர்நீத்த சிலுவையும் ஜெருசலமில் காணப்பட்டது என்றும் கூறி அவர்களும் ஜெருசலத்தை தங்களின் புனித நகரம் எனக் கருதுவதுடன் அந்த நகரை வசப்படுத்த அடுத்தடுத்து அடித்து ஆடுகின்றனர்.
இதனால், புராதன நகரமான ஜெருசலம் எப்போதும் சர்ச்சைக்குள்ளான ஒரு நகரமாகத் தொடர்கிறது. அதேவேளை, பழைய ஜெருசலத்தில், அர்மீனியர்-கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய நாற்தரப்பினர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய ஜெருசலம் நகரை மையமாகக் கொண்டு ஏறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல்நிலை தொடர்கிறது.
அதெப்படி ஒரே இடத்தை இரு சமயத்தவர் சொந்தம் கொண்டாட முடியும்? இந்தப் புள்ளியில்தான் மதவாதம் குடிகொண்டுள்ளது. இந்த மதவாதம்தான், இப்பொழுது இருதரப்பு மக்களின் இரத்தத்தில் குளித்து, எக்காளக் கும்மாளம் இடுகிறது.
இதற்கிடையில், இதே ஜெருசலம் அமைந்துள்ள இஸ்ரேலுக்கும் இஸ்ரேலை ஒட்டியுள்ள பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதி ஏற்பட பாடுபட்டார் என்று சொல்லி ஒரு தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிய பம்மாத்துக் கூத்தும் நடைபெற்றது. நோபல் பரிசு என்பதெல்லாம் இப்போது, இந்தியாவின் ‘பாரத ரத்தினா’ பட்டயத்தைப் போல ஆள்பார்த்து, நிறம் பார்த்து, இனம் பார்த்து பங்கிடப்படுகிறது. அப்படித்தான் 1994-இல் அமைதிக்கான நோபல் பரிசு மூவருக்கு பங்கிடப்பட்டது; அம்மூவரில் ஒருவர் யாசர் அராஃபாத்.

பி.எல்.ஓ. என்னும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரால் ‘அபூ அம்மார்’ என வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவரும் அதன் தலைவராக விளங்கியவருமான யாசர் அராஃபாத், இஸ்ரேலுடன் பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனம் கொண்டிருந்த மோதல் போக்கிற்கு முடிவு காணவிரும்பி அந்த மண்டலத்தில் அமைதி ஏற்பட முயன்றார் என்பது உண்மைதான். இதன் தொடர்பில், மிகவும் மினக்கெட்ட யாசர் அராஃபாத், 1991 மாட்ரிட் மாநாட்டையும் 1993 ஒஸ்லோ உடன்பாட்டையும் அக்கறையுடன் பயன்படுத்தினார். நோபல் பரிசு பெற்றபின் 2000-புத்தாயிரத்தாண்டில்கூட காம்ப் டேவிட் உச்சிநிலை மாநாட்டில் பாலஸ்தீன அமைதிக்காக காய் நகர்த்தினார். இருந்தாலும், அமைதி என்ற ஒன்றுதான் இன்றுவரை அந்த மண்டலத்திற்கு அந்நியப்பட்டு நிற்கிறது.
இதில், இஸ்ரேல் மேற்கொள்ளும் இன்னொரு சண்டித்தனமும் அடங்கி உள்ளது. இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைந்துள்ள காஸா பகுதியை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்பதில் இஸ்ரேல் மும்முரமாக உள்ளது; இதற்கு அமெரிக்காவின் ஓரக்கண் பார்வையும் அனுசரணையாக உள்ளது. ஆனால், காஸாவிலோ பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் இயக்கம் தன்னாட்சி நடத்திவருகிறது.
இதனால், இருதரப்புப் பகை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்தான் ஒரு வாரத்திற்கு முன்பு, சரியாக சொல்ல வேண்டுமெனில், அக்டோபர் 7-ஆம் நாளில் இஸ்ரேலிய எல்லையில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் இசை ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்த நேரம் பார்த்து ஹமாஸ் படையினர் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதில் நூற்றுக் கணக்கான இஸ்ரேலியர் கொல்லப்பட்ட நிலையில், பருவப் பெண்கள், தாய்-மகன் என அதிகமான பேரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்தும் சென்றனர்.
இதனை எதிர்பாராத இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக்கொண்டு வெகுண்டெழுந்து பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இருதரப்பிலும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருவதால், ஆயிரக் கணக்கான மக்கள், இடம்பெயர்ந்தும் மடிந்தும் வருகின்றனர்.
மொத்தத்தில் மதவாதப் பேய் அந்த மண்டிலத்தில் கொட்டமடித்து கும்மாளம் போடுகிறது.
அங்கு வாழ்ந்த மனிதர்களை யெல்லாம் விரட்டி அடித்துவிட்டு, அவர்கள் அன்புமிக வாழ்ந்த கட்டிடங்கள் இப்போது உருக்குலைந்து எலும்புக்கூடு-களாகத் தெரிய, அவற்றின் உச்சியில் நமட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் மதவாதப்பிசாசே, உன்னில் படிந்திருக்கும் இரத்தத்தின் வீச்சம், இங்கு மட்டுமல்ல; எங்கெங்கும் வீசுகிறது.

இந்த உலகம் இதுவரை நாம் நம்பியபடி தட்டையானதும் அல்ல: அதைத் பிரமாண்ட தூண்கள் தாங்கிப் பிடிக்கவும் இல்லை; மாறாக, அது அந்தரத்தில் இருக்கின்ற ஒரு கோள் ஆகும். அப்படி அந்தரத்தில் இருக்கின்ற பூமி.. ., நாம்வாழும் அதேபூமி, சோம்பி இருக்கவில்லை; தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அப்படி சுற்றும் பூமி, ஓரிடத்தில் நிலைகொண்டு சுற்றவில்லை; ஒரு நீள்வட்ட பாதையில் சிறிதும் பிசகாமல் சுழன்றபடி சூரியனை சுற்றியும் வருகிறது. அப்படி சுற்றிவருகின்ற காலமே ஓராண்டு ஆகும்; இந்த பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் காலம்தான் ஒரு நாள் என்றெல்லாம் வானியல் உண்மையை எடுத்துச் சொன்ன கலிலியோ என்னும் அறிவியல் மேதையை பித்துப் பிடித்தவன் என்று முத்திரை குத்தி, அவரின் தலையை காவ வாங்க முனைந்த மதவாதமே, உன் இலட்சணம் குறித்து எங்களுக்குத் தெரியாதா என்ன?
மதவாத கொள்ளிவாய்ப் பிசாசே, உன் இரத்தவெறித் தாண்டவம், இன்றல்ல.., நேற்றல்ல; ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.
8,000 முதல் 10,000 வரையிலான சமணர்களை கழுவேற்றிக் கொன்று சைவ சமயத்தை வளர்த்தாயே, அப்போது உன் கோரைப்பல் வாயில் மட்டுமல்ல; கூரிய நகமுடைய கொடுங்கரங்களிலும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது;

அதற்கு முன் சாம்ராட் அசோகன், தன் படை வீரர்களை கொலை வாளுடன் ஏவிவிட்டு, ஒரு தலைக்கு ஒரு தங்கக் காசு என சன்மானம் கொடுத்து பல்லாயிரக் கணக்கான ஆசீவர்களைக் கொன்று குவித்து புத்த மதத்தை வளர்த்தானே கீழை தேசங்களில், அப்போது தொடங்கியது இந்த மதவாத பூதத்தின் உயிர்குடிக்கும் வேட்கை.
இதற்கிடையில் இந்த மதவாதப் பேயின் மனித வேட்டை மேலை தேசத்திலும் சிலுவைப் போர்கள் என்ற பெயரில் தொடர்ந்தது. உலக செம்மொழிகளுள் ஒன்றான இலத்தீன் மொழி பேசுவோரில் மதவாதம் கொண்டோரும் தோன்றினர்.
அவர்கள் உருவாக்கிய இலத்தீன் திருச்சபையின் ஒத்துழைப்புடன் மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ள ஜெருசலத்தை இஸ்லாமியரிடம் இருந்து பறிப்பதற்காக கிறித்துவர்கள் தொடுத்த போர்களே சிலுவைப் போர்கள் என்று உலக ஆன்மிக வரலாற்றில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இப்படிப்பட்ட மத சண்டைகள், ஒன்றல்ல, இரண்டல்ல; ஒன்பது போர்கள் நடைபெற்றன. முதல் சிலுவைப் போர் 1095 முதல் 1099வரை நடைபெற்றது. கடைசி சிலுவைப் போர் 1271-72இல் நடைபெற்றது.
இந்த மதவாத சண்டை, கிறிஸ்துவர்-இஸ்லாமியருக்கு இடையில் மட்டும் இடம்பெறவில்ல; கிறிஸ்துவர்களுக்குள்ளேயே ரோமன் கத்தொலிக்கர்கள்-ப்ராட்டஸ்டண்ட் பிரிவினர் என கிறித்தவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டதும் அடங்கும்.

இத்தகைய சிலுவைப் போர்களின்வழி மேற்கத்திய மக்கள் கோடிக்கணக்கான பேரின் இரத்தத்தை உறிஞ்சிய பின்னும் அடங்காத இம்மதவாத இரத்தக்காட்டேறி, தெற்கு ஆசியாவில் இஸ்லாமியர்கள் வேண்டி விரும்பி தங்களுக்காக சமைத்துக் கொண்ட பாகிஸ்தானிலும் தன் பங்கை ஆற்றத் தவறவில்லை.
அங்குகூட, தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நேரம் பார்த்து இஸ்லாமியர்கள் மீதே இஸ்லாமியர்களை ஏவிவிட்டு, பள்ளிவாசல்களில் வெடிகுண்டை வீச வைத்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் பெருமக்களின் உயிர்குடிக்கும் இந்த மதவாதப் பேயின் நரமாமிச வேட்டை இன்றளவும் நின்ற பாடில்லை.
அண்மைக் காலமாக, இந்த மதவாதப் பேயின் கொட்டம், கல்விச் சாலைகளின் பக்கமும் எட்டிப் பார்க்கிறது.
அன்ன சத்திரங்களை ஆயிரக் கணக்கில் எழுப்புதலைக் காட்டிலும் ஆலயங்களை பதினாயிரம் அளவில் நிருமானிப்பதை விடவும் தருமம் செய்ய விழைந்து கோடிக் கணக்கில் கொடையளிப்பதை விடவும் ஓர் ஏழைக்கு கல்வி புகட்டல் கோடி புண்ணியம் என்றான் புதுமைப் பாவலன் பாரதி;

அவன் சொல்லி, இப்பொழுது நூறாண்டு கழித்து, கல்விச் சாலையிலும் மதக் கல்வி வேண்டி அடம்பிடித்து மண்டியிடுகிறது மதவாதம். மாணவர்களின் பிஞ்சு மனதில் மதவாத நஞ்சைக் கலக்க முனைப்புகாடும் மதவாதப் பேயே, உனக்குதான் வழிபாட்டுத் தலங்களும் மதவாத அமைப்புகளும் இலட்சக் கணக்கில் உள்ளனவே, அவை போதாதா உன் இரத்த வேட்டைக்கு?
கல்விச் சாலைகளையும் அபகரிக்கப்பார்க்கும் உனக்கு முடிவுரை எழுதப்படும் நாள் ஏந்நாள்?
உன் பேய்க் குணத்தை அறிந்துதான், மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று விழைந்தார் அருட்பிரகாசர் வள்ளலார் பெருமான்; அந்தப் புரட்சித் துறவியின் அத்தியாயமோ பாதிக் கிணறு தாண்டிய கதையாக அமைந்துவிட்டது.
ஈழ மண்ணில், கடந்த 75 ஆண்டுகளாக ஒன்றரை இலட்சத் தமிழர்களின் குருதியைக் குடித்து தன்னுடைய தாகத்தைத் தணித்துக் கொண்ட பௌத்த மதவாதப் பேயின் சதிராட்டம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. பத்தம்-சரணம்-கச்சாமி என்பது வெற்றுப் பேச்சு என்றாகிவிட்டது.
மதவாத பூதம் மட்டும் இந்த மண்ணில் தோன்றியிரா விட்டால்
கழுவேற்றங்கள் இடம்பெற்றிருக்காது!
சிலுவைப் போர்களுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது!
இலங்கைக்குள் உள்நாட்டுப் போர் இடம்பெற்றிருக்காது!.
பாகிஸ்தான் என்ற நாடே உருவாகியிருக்காது.
காந்தியைக் கொல்ல ஒரு கோட்சே புறப்பட்டிருக்கமாட்டான்!
சனாதனம் என்னும் வர்ணாசிரமம் கற்பிக்கப்பட்டிருக்காது!
இராமசாமி, தந்தை பெரியார் ஆகியிருக்கமாட்டார்.
ஆர்.எஸ்.எஸ். என்னும் மதத் தீவிரவாதம் பரவாமல் இருந்திருக்கும்!
மொத்தத்தில் புனிதம் என்ற சொல்லே பிறந்திருந்திருக்காது!
பூமி எங்கும் மனிதம் மட்டும் மலர்ந்திருக்கும்.
கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் சமூக சமதரும சிந்தனை எங்கெங்கும் பரந்து விரிந்திருக்கும்.
போனது போகட்டும்; இனியாவது நல்லது ஆகட்டும்!
அதனால், மதவாத கொடுங்கோலியே, நீ இன்றோடு அற்றுவிடு!!
