
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா, அக்.15:
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல், மேற்குக் கரை, காஸா, பாலஸ்தீனப் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மடிந்து வருகின்றனர். அதைப்போல இலட்சக்கணக்கான மக்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்தும் துறந்தும் இடம்பெயர்ந்து அல்லல்பட்டு ஆறாத்துயரில் மூழ்கியுள்ளதற்கு மலேசிய இந்து சங்கம் மிகவும் வருத்தம் அடைகிறது.
இந்த நிலை இனியும் தொடராகபடி, அங்கு சண்டையிடும் தரப்பினர், உடனே போரை நிறுத்திக் கொண்டு, பேச்சு நடத்தி தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும் மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் அதன் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய ஒற்றுமை அரசு, காஸா-வில் அல்லல்படும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளதை மலேசிய இந்து சங்கம் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள தங்க கணேசன், அங்கு உடனே சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்வதுடன் ஐநா மன்றத்தின் பாதுகாப்புக் குழுவிடமும் மலேசிய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் மாண்புடனும் அமைதியுடனும் சகவாழ்வு வாழ சமயங்கள், வழிகாண வேண்டுமே அல்லாமல், பொதுமக்கள் அநியாயமாக மரணமடையும் வகையில் சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிக்கல் எதுவாயினும் சம்பந்தப்பட்ட சமயங்களின் தலைவர்கள் அந்தந்த மட்டத்தில் பேசித் தீர்வு காண்பதுதான் பொருத்தமானது; மாறாக, நாட்டை ஆளும் தரப்பினர் அரசியலுடன் மதத்தைக் கலப்பதும் அதற்காகப் போரிடுவதும் இருதரப்பு பாதிப்புக்குத்தான் வழிகோலும்; மேலும் அமைதிக்கும் மக்களின் உயிர்ப்பாதுகாப்பிற்கு அது குந்தகமாக அமையும்.
எனவே, மனிதநேயத்தை முன்னிறுத்தி, மனித உயிர்களை மதித்து பாலஸ்தீன மண்டலத்தில் உடனே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று இலட்சக் கணக்கான இந்துப் பெருமக்களின் சார்பில் மீண்டும் கேட்டுக் கொள்வதாக தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
