33 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

தனி மனிதனாக சாதித்த மலையாண்டி – துணை அமைச்சர் சரசுவதி புகழ்ச்சரம்

🔥 Views : 39
👁 Reading Now : 37

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், அக்.16:
மலேசியத் தமிழ் அச்சு ஊடக நாயகன் அதி.குமணனைப் பற்றி ‘இளைய தமிழவேள்’ ஆதிகுமணன் என்னும் நூலைத் தொகுத்த புகைப்பட கலைஞர் ஆதி குமணனை துணை சரசுவதி கந்தசாமி வெகுவாகப் பாராட்டினார்.

ஆதி குமணன் மறைந்தபோது மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பினரும் பல்துறை சார்ந்து வெளியிட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் கழித்து இப்பொழுது நூலாக வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டு விழா நேற்று கோலாலம்பூர், டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சரசுவதி, ஆதி.குமணனைப் புகழ்ந்து பேசினார். குறிப்பாக, அமைச்சராக இருந்த துன்.சாமிவேலு, ஆதி குமணன்மீது தொடுத்த வழக்குகளைப் பற்றியும் ஆதி குமணன் மறைவுக்குப் பின் சந்தித்த நூறு மில்லியன் நட்ட ஈட்டு வழக்கைப் பற்றியும் பேசினார்.

இந்த விழாவில் ஆதி குமணின் மனைவி, மகன் மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், பத்திரிகை உலகில் அவர் உருவாக்கிய தம்பிமார் ஒருசிலரைத் தவரும் எவரும் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை, ஆதி குமணன் வழிநடத்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இருந்துகூட ஒருவரும் கலந்துகொள்ள வில்லையே என்று சரசுவதி ஆதங்கப்பட்டார்.

பினாங்கு பட்டர்வொர்த்தில் பிறந்த இந்த இலக்கிய ஆளுமை, நாட்டின் தலைநகரை மையமாகக் கொண்டு மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையை ஒரு புதிய பாட்டைக்கு மடைமற்றிய பாங்கெல்லாம் இந்த நூலில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

ஆரம்பக் கல்வியையும் பட்டப் படிப்பையும் தமிழ் நாட்டில் பெற்ற ஆதி. குமணன், புகழ்பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம்பெற்றார். அதன்பின் தாயகம் திரும்பிய ஆதி.குமணன், கோலாலம்பூர் பாளையகாட் லுங்கிக் கடையில் பணியில் சேர்ந்து, பின்னர் தரணியெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் போற்றும் பத்திரிகை ஆளுமையாக உருவெடுத்தார்.

முதலில் தமிழ் மலர் நாளேட்டில் இணைந்து, பின்னர் தமிழ் ஓசை நாளேட்டை வழிநடத்தி, அதன் பின்ன மலேசிய நண்பனை தன் வாழ்நாளின் நிறைவுக்கட்டம்வரை வழிநடத்தினார்.

இந்த காலக் கட்டத்தில், மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்ட, குறிப்பாக தமிழர்கள் சந்தித்த பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, ஆன்மிக பிரச்சினைகளுக்காக தன் பேனாமுனைவழி குரல்கொடுத்தார். இதனால், அவர் எதிர்கொண்ட போராட்டங்களும் வழக்குகளும் அதிகம் என்பதை மலேசியத் தமிழர்கள், குறிப்பாக தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பத்திரிகைத் துறையின் வரலாற்றைப் பற்றி ஏராளமான அரிய புகைப்படங்களுடன் ஆக்கப்பட்டுள்ள இந்த நூலை, தனி மனிதாக வெளியிட்ட மலையாண்டி பாராட்டுக்கு உரியவர் என்று சரசுவதி தன் உரையில் குறிப்பிட்டார்.

அமைச்சர் வி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலாளர் டத்தோ பி.சகாதேவன், எழுத்தாளர் சங்க அயலக பொறுப்பாளர் இராஜேந்திரன், தென்றல் பருவ இதழ் ஆசிரியர் வித்யாசாகர், தன்முனைப்பு பேச்சாளர் மு.கணேசன், ஜெயபக்தி நிறுவர் டத்தோ கு.செல்வராஜ் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கு.தேவேந்திரன் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்வில் ஆர்.டி.எம். வி.ஆறுமுகம் வழிநடத்தினார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் புகைப்படக் கருவியுடன் காட்சிதரும் மலையாண்டி, இந்த நிகழ்ச்சியின் நாயகன் என்பதால் மாலைகளையும் சிறப்பு ஆடைகளையும் மாற்றிமாற்றி ஏந்திக்கொண்டு வலம் வந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles